

ஆப்கன் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், ஆப்கன் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆப்கனில் அமையவுள்ள புதிய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என சீனா கூறியுள்ளது. தலிபான்களுக்கு எப்போதுமே பாகிஸ்தானின் ஆதரவும் உண்டு. எனவே தலிபான்கள் கையில் ஆட்சி சென்றது குறித்து இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தலிபான்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கனிஸ்தானிலிருந்து இந்தியா தனது தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் எனப் பலரையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டுவந்துள்ளது. இந்தோ டிபட்டென் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையினர் உள்ளிட்ட இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து கூர்மையாக கவனித்து வருவதாகவும் அவ்வப்போது அண்டை நாட்டின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் விவரமாகக் கேட்டறிவதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலையில் வந்த விமானத்தில் இந்தியத் தூதர் ருத்ரேந்திரா டான்டன் உட்பட 120 பேர் பத்திரமாக அழைத்துவரப்பட்டனர். அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆந்தணி ப்ளின்கென்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று காலை 120 பேர் அழைத்து வரப்பட்டனர்.