

இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்ததை போல அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எதிர்த்து தலிபான்கள் போராடி வென்றுள்ளனர், இதில் தவறென்ன என சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் பராக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் சிக்கி்க் கொண்டனர். அவர்களை மீட்டு வர ஒவ்வொரு நாடும் விமானத்தை அனுப்பி வருகிறது.
காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள், தூதரக ஊழியர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டோரை இந்திய விமானப்படை விமானம் பத்திரமாக மீட்டது. இந்தநிலையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் பராக் தலிபான்களை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா போராடி சுதந்திரம் பெற்றது. தலிபான்கள் தங்கள் நாடு சுதந்திரமடையவும், அந்நியர்களின் பிடியில் இருந்து விடுபடவும் போராடி வருகின்றனர். இப்போது வென்றுள்ளனர். தங்கள் நாட்டை தாங்களே வழி நடத்த விரும்புகின்றனர். இதில் என்ன தவறு இருக்க முடியும். தலிபான்கள் ரஷ்யா, அமெரிக்கா போன்ற வலுவான நாடுகளைக் கூட தங்கள் நாட்டை கைபற்ற அனுமதிக்காத வலிமையான சக்தியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.