

ஆப்கானிஸ்தான் குருத்வாராவில் உள்ள 200 சீக்கியர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் நாட்டின் முழு கட்டுப்பாடும் இப்போது தலிபான்கள் கையில் வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் குருத்வாராவில் சிக்கியுள்ள 200 சீக்கியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் ட்விட்டரில் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்துள்ளதால் அங்குள்ள குருத்வாராவில் 200-க்கும்மேற்பட்ட சீக்கியர்கள் தஞ்சமடைந் துள்ளனர்.
இந்தியாவுக்கு நல்லதல்ல
அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்கள் கையில் வந்துள்ளதால் அது நமது நாட்டுக்கு நல்லதல்ல. இதனால் சீனா-பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும். அந்த அறிகுறிகள் நமது நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தாது. நாம் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருக்கும் நமது மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ