

கின்னார் நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம் என இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலம் கின்னார் மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அரசுப் பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கிக் கொண்டன. அங்கு மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் நேற்று 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் கின்னார் நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இறந்த வர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
இந்நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கின்னார் நிலச்சரிவில் காயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன். சம்பவ இடத்தில் இன்னும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதுகிறோம். சம்பவ பகுதியில் நிலைமையை மதிப்பிடவும் அங்கு மலைகள் ஏன் உடைகின்றன என்பதை ஆய்வு செய்யவும் ஒரு குழுவை அனுப்பியுள்ளோம். கின்னார் நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். அறிவியல் ஆய்வு மூலம் ஒரு வழியை கண்டுபிடிக்க முயன்று வருகிறோம்” என்றார்.
மாநில பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் சுதேஷ் குமார் மோக்தா கூறும்போது, “கின்னார் நிலச்சரிவில் எஸ்யுவி கார் ஒன்று புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இதுவரை அந்த காரை கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.
நிலச்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்தில் 22 பயணிகள் இருந்தனர். இதில் பெரும்பாலானவர்களின் உடல்கள், உருக்குலைந்த அந்தப் பேருந்தில் இருந்து மீட்கப்பட்டன. நிலச்சரிவு நாளில் ஒரு டாக்சி காரில் 8 பேரின் உடல்கள் காணப்பட்டன. மேலும் இரு கார்கள் சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றில் யாரும் இல்லை.
இதனிடையே அந்த வழித்தடத்தில் பாதுகாப்பு கருதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.