சசிகலா மீதான சிறை முறைகேடு வழக்கில் 25-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

சசிகலா மீதான சிறை முறைகேடு வழக்கில் 25-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
Updated on
1 min read

சசிகலா மீதான சிறை முறைகேடு வழக்கில் வரும் 25-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் அடைக்கப்பட்டு இருந்தார். அவரது தண்டனை காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த ஜனவரியில் சசிகலா விடுதலை ஆனார். சசிகலா சிறையில் இருந்தபோது சிறப்பு சலுகை பெற்றதாக அப்போதைய சிறைத் துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதற்காக டிஜிபி.யாக இருந்த சத்திய நாராயணராவ், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இதை விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு கடந்த 2019-ம் ஆண்டு, 'சசிகலா சிறப்புசலுகைகளை பெற்றது உண்மையே' என 245 பக்க அளவில் அறிக்கை அளித்தது. இதையடுத்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன‌ர்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 'சசிகலா மீதான சிறை முறைகேடு வழக்கை ஊழல் தடுப்பு படை போலீஸார் தாமதம் செய்யாமல் விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்'என கோரினார். இதை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் அபய் சீனிவாஸ், சுராஜ் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு வரும் 25-ம் தேதிக்குள் போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் சசிகலா வழக்கின் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய சிறை அதிகாரி கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான வீடு, உறவினர்களின் அலுவலகங் களில் 2 நாட்கள் சோதனை நடத்தினர். மேலும் வரும் 25-ம்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். சிறை முறைகேடு வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரிடம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களையும் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in