ஆப்கனிலிருந்து இந்துக்கள், சீக்கியர்கள் வெளியேற உதவுவோம்: வெளியுறவுச் செயலர் அரிந்தம் பாக்சி உறுதி

ஆப்கனிலிருந்து இந்துக்கள், சீக்கியர்கள் வெளியேற உதவுவோம்: வெளியுறவுச் செயலர் அரிந்தம் பாக்சி உறுதி
Updated on
1 min read

ஆப்கனிலிருந்து இந்துக்கள், சீக்கியர்கள் வெளியேற உதவுவோம் என வெளியுறவுத் துறை செயலர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பகுதியைத் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதை அடுத்து, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காபூல் நகரில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானத்தில் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இன்று காபூல் சென்று, அங்கிருந்து இந்தியர்களை அழைத்துவரத் திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வெளியுறவுத் துறை செயலர் அரிந்தம் பாக்சி, "ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் பலரும் தாயகம் திரும்ப விரும்புகிறார்கள்.

ஆப்கன் வாழ் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் தலைவர்களுடன் தொடர்ந்து நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புவர்களுக்கு நிச்சயம் இந்தியா தஞ்சம் கொடுக்கும்.

பரஸ்பர வளர்ச்சிக்கு துணை நின்ற ஆப்கானிஸ்தானியர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் அவர்களுக்கு நமது துணை இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆப்கன் வான்வழி மூடப்பட்டுள்ளதாலேயே மீட்பு விமானங்களை இயக்க இயலவில்லை. ஆனால், எப்போது சிவில் விமானப்போக்குவரதுத் தொடங்கினாலும் நிச்சயமாக அங்கு வாழும் இந்துக்கள், சீக்கியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அதுவரை அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அவசர எண்களைக் கொடுத்துள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in