

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களை ஜூலை 11-ம் தேதி ஆஜராகும்படி, டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்தக் குற்றப்பத்திரிகையை ஆராய்ந்த நீதிமன்றம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
பின்னணி:
2011-ம் ஆண்டு ஏர்செல் உரிமையாளர் சி.சிவசங்கரன், மேக்சிஸ் நிறுவனத்துக்கு பங்குகளை விற்குமாறு தனக்கு அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சிபிஐ-யிடம் புகார் அளித்ததையடுத்து இந்த வழக்கில் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் விசாரணை அதிகாரிகளின் பார்வைக்கு வந்தது.
இதனையடுத்து அதே 2011-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதாவது அலைவரிசை உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்த ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் தனது நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க கடும் நெருக்கடி கொடுத்ததாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.