காங்கிரஸிலிருந்து விலகினார் மகளிர் தலைவர் சுஷ்மிதா தேவ்: மம்தாவுடன் ஐக்கியமா?

காங்கிரஸிலிருந்து விலகிய மகளிர் பிரிவுத் தலைவர் சுஷ்மிதா தேவ் | படம் உதவி: ட்விட்டர்.
காங்கிரஸிலிருந்து விலகிய மகளிர் பிரிவுத் தலைவர் சுஷ்மிதா தேவ் | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவராக இருந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான சுஷ்மிதா தேவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் சுஷ்மிதா தேவ், தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். இன்று பிற்பகல் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து அந்தக் கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் விலகினேன் என்பதற்கான எந்தக் காரணத்தையும் சுஷ்மிதா தேவ் தெரிவிக்கவில்லை.

முன்னாள் எம்.பி. சுஷ்மிதா தேவ், கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், “பொது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறேன். ஆதலால், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். காங்கிரஸ் கட்சியுடன் 30 ஆண்டுகால உறவு மகிழ்ச்சியளிக்கிறது. உங்களின் ஆசீர்வாதத்துடன் புதிய அத்தியாயத்தைத் தொடங்கப்போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த சனிக்கிழமை அசாம் காங்கிரஸ் தலைவரையும், பல்வேறு நிர்வாகிகளையும் சுஷ்மிதா தேவ் சந்தித்துப் பேசியுள்ளார். அசாம் மாநிலம் பாரக் பள்ளத்தாக்குப் பகுதியில் சில்சார் தொகுதியிலிருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுஷ்மிதா தேவ். இவரின் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் பலருக்கும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட இடம் வழங்கவில்லை என்று அதிருப்தியுடன் சுஷ்மிதா தேவ் இருந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர் சுஷ்மிதா தேவ் விலகல் குறித்தும், தலைமை குறித்தும் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில், “காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சுஷ்மிதா தேவ் விலகியுள்ளார். இளம் தலைவர்கள் விலகும்போது, கட்சியை வலிமைப்படுத்த எடுக்கும் முயற்சிக்கு வயதான நாங்கள் குற்றம் சாட்டப்படுகிறோம். கட்சியும் . கண்களை அகல மூடிக்கொண்டு செல்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in