

காஷ்மீரில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியின் தந்தை முசாபர் வானி, அரசு பள்ளியில் நேற்று தேசிய கொடியேற்றினார்.
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரதின விழா ஜம்மு காஷ்மீரில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. காஷ்மீரின் பல்வேறுஇடங்களில் நடந்த தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப் பட்டன. அவற்றில் தீவிரவாதி புர்ஹான் வானியின் தந்தை, அரசு பள்ளியில் தேசிய கொடியேற்றிய வீடியோ வைரலாகி உள்ளது.
காஷ்மீரில் கடந்த 2016-ம் ஆண்டுஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த புர்ஹான் வானி என்ற இளைஞர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹிஸ்புல் அமைப்பின் மிக முக்கிய கமாண்டராக இருந்தவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் முழுவதும் 5 மாதங்களுக்கு மேல் பெரும் வன்முறைகள் ஏற்பட்டன. போலீஸார், பாதுகாப்புப் படையினர் மீதுதொடர்ந்து கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 100 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அதன்பின், பாதுகாப்புப் படையினர் எடுத்த கடும் நடவடிக்கையால் வன்முறை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்களில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மாநில நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. அதற்கேற்ப நேற்று மட்டும் காஷ்மீர் முழுவதும் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனினும், விழா கொண்டாடுவதற்கான முன்னெச்சரிக்கை வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதன்படி காஷ்மீர் முழுவதும் கோலாகலமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
சுட்டுக் கொல்லப்பட்ட புர்ஹான் வானியின் தந்தை, டிரால் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் நேற்று பள்ளியில் தேசிய கொடியேற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
காஷ்மீரில் மிகப்பெரிய ஷெர் இ காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், அதன் இயக்குநர் தேசிய கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர்.
காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், பிரிவினைவாத தலைவர்களின் மிரட்டல் போன்றகாரணங்களால் பலத்த பாதுகாப்புடன் சுதந்திர தின விழா சில இடங்களில் நடைபெறும். ஆனால்,கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
அதன்பின், தற்போதுதான் சுதந்திர தின விழா முதல் முறையாக அச்சமின்றி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக ஷெரீ இ காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பிரம்மாண்டமாக சுதந்திர தின விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு, காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். - பிடிஐ