

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான செயல் திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உட்பட பல முக்கிய விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். இதையடுத்து, தனது சுதந்திர தின உரையை நிறைவு செய்வதற்கு முன்பு இந்தி மொழியில் ஒரு கவிதையை பிரதமர் மோடி வாசித்தார். அந்தக் கவிதையில் இருந்த அம்சங்களாவன:
21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் கனவுகளும், ஆசைகளும் நிறைவேறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கான புதிய அத்தியாயத்தை படைக்க இதுவே சரியான தருணம். இந்தியாவில் அனைவரிடமும் அதிகாரம் இருக்கிறது. எல்லா இடங்களிலும் தேசப்பற்று நிறைந்திருக்கிறது. சோர்வில்லாமல் எழுந்து வீறுநடை போட இதுவே சரியான காலம். இந்திய இளைஞர்களால் முடியாதது என ஒன்றுமில்லை. உங்கள் திறமையையும், கடமையையும் உணர்ந்து செயல்பட இதுவே பொன்னான நேரம். இவ்வாறு அந்தக் கவிதையில் கூறப்பட்டுள்ளது.