

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பான அமலாக்கப்பிரிவு வழக்கில் தயாளு அம்மாளும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக, சட்டவிரோத பணப் புழக்க தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கப்பிரிவு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம் உள்ளிட்ட 9 பேர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். தயாளு அம்மாள் சார்பில் வழக்கில் இருந்தே விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மீது கனிமொழி தரப்பு வாதம் முடிந்துள்ளது. புதன்கிழமை ஸ்வான் டெலிகாம் நிர்வாகி ஷாஹித் பல்வா, கலைஞர் டி.வி. முன்னாள் இயக்குநர் சரத்குமார், கரீம் மொரானி உள்ளிட்ட 6 பேர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அவர்கள் தங்கள் வாதத்தின் போது, “2ஜி வழக்கில் உள்ள ஆவணங்களைச் சுட்டிக்காட்டி, அமலாக்கப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் உள்ளன. அந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.
எனவே, சாட்சியங்களை கலைக்கும் வேலைக்கே இடமில்லை. மேலும், 2ஜி வழக்கின் குற்றச்சாட்டுகளே இன்னும் நிரூபணம் ஆகாத நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
ஆ.ராசா, அமிர்தம் ஆகியோர் சார்பில் வியாழக்கிழமை வாதிட உள்ளனர். தயாளு அம்மாள் சார்பில் வழக்கில் இருந்து விடு விக்கக் கோரி மனு தாக்கல் செய் யப்பட்டிருப்பதால், ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை.
இதுகுறித்து விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, “வழக்கில் இருந்து விடுவிக்கும் மனு மீது தனியாக விசாரணை நடை பெறும். இதற்கிடையே, மற்றவர் களைப்போல் ஜாமீன் மனு ஒன்றையும் தயாளு அம்மாள் தாக்கல் செய்யலாம்” என்று அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, வழக்கில் தன் தரப்பு வாதத்தை உறுதி செய்யும் வகையில், தன்னை சாட்சி யாகவும் விசாரிக்க வேண்டும் என்று ஷாஹித் பல்வா மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீதும் நீதிபதி தன் தீர்ப்பை அளிக்கவுள்ளார்.