

ரயில்வேத்துறை மேற்கொள்ளும் பெரிய திட்டப் பணிகளைக் கண்காணிக்க ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் பகுதியளவு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு இத்தகவலைத் தெரிவித்தார். வரும் நிதி ஆண்டில் பல்வேறு திட்டப் பணிகளை இத்துறை மேற் கொள்ள உள்ளது. அவற்றைக் கண்காணிக்க பகுதியளவு செயற் கைக்கோள் தொழில்நுட்பமும், ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பிரத்யேக சரக்கு பாதை பணிகளைக் கண்காணிக்க இது பயன்படுத்தப்படும். இது தவிர தகவல் தொகுப்புகளை ஆராய சிறப்பு போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு குழு ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சகத்துக்கு ஆண்டுதோறும் 100 டெராபைட் அளவுக்கு தகவல்கள் கிடைக் கின்றன. இதன் மூலம் உரிய முதலீட்டாளர்களைக் கண்டறிய சிறப்புக்குழு நடவடிக்கைகள் எடுக்கும் என்றார்.