

கர்நாடகாவில் தீவிரவாத செயல்பாடுகளை தடுப்பதற்காக மங்களூருவில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கிளையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவிலும், மங்களூருவிலும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைதாகி வருவதை அரசு கவனித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் மங்களூருவை சுற்றியுள்ள பட்கல், உல்லால், தக்ஷின கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்டோர் இத்தகைய வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத செயல்பாடுகள் காரணமாகவே மங்களூரு வட்டாரத்தில் மதரீதியான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
எனவே, கர்நாடகாவில் தேசிய புலனாய்வு முகமையின் கிளையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மங்களூருவில் தேசிய புலனாய்வு முகமையின் கிளையை அமைப்பது தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா இரண்டு கட்ட ஆலோசனைகளை முடித்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் ஒப்புதலுடன் விரைவில் முடிவெடுக் கப்படும்.
இவ்வாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.