Published : 15 Aug 2021 03:24 am

Updated : 15 Aug 2021 07:11 am

 

Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 07:11 AM

பெண் குழந்தைகளை மதிக்க கற்றுக்கொடுக்கும் தெலங்கானா கிராமத்தினர்: பிளஸ்-2 ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்த மாநில அரசு

telangana-village
பெத்த மைலாபுரம் கிராமத்தில் சிறுமிக்கு அர்ச்சகர் ரங்கராஜன் கன்யா வந்தனம் செய்தார்.

ஹைதராபாத்

தெலங்கானாவில் உள்ள 2 கிராமங்களில், பெண் குழந்தைகளை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு திட்டங்
களை செயல்படுத்தி வருகின்றனர். இது அம்மாநில இண்டர்மீடியட் 2-ம் ஆண்டின் (பிளஸ்-2) ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. இதற்
கெல்லாம் முடிவுகட்ட, பெண்குழந்தைகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இன்றைய இளைஞர்கள் மனதில் விதைக்க வேண்டியது அவசியம்.


இந்நிலையில், தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம், ஹரிதாஸ்பூர் கிராம மக்கள் பெண்
குழந்தைகளை மதிக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி உறுதி பூண்டனர். அன்று சத்யவாணி என்பவருக்கு பிறந்த
பவ்ய  என்ற குழந்தைக்கு ஊரே ஒன்று கூடி விழா எடுத்தது.

அன்று முதல் இன்று வரை அந்த கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால், ஊரெல்லாம் இனிப்பு வழங்கி, தெருவெல்லாம் மின் விளக்கு அலங்காரம் செய்து கொண்டாடி மகிழ்கின்றனர். இதுவரை 72 பெண் குழந்தைகளுக்கு அந்த கிராமம் விழா எடுத்து மகிழ்ந்துள்ளது. மேலும், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாத பூஜைகள் செய்து வாழ்த்தி விழா எடுத்துள்ளனர்.

இதைப் பார்த்து, பக்கத்தில் உள்ள பெத்த மைலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஷஃபிதலைமையில் அந்த கிராம மக்கள் ஒன்று கூடி பெண் குழந்தைகளை மதிக்க வேண்டுமென முடிவு செய்தனர். அதன் பின்னர் பெண் பிள்ளைகளுக்கென மத்திய அரசின் ‘சுகன்ய சம்ருதியோஜனா’ திட்டத்தின் கீழ் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் அஞ்சல் நிலையம் மற்றும் வங்கிகளில் சிறிதளவு பணத்தை டெபாசிட் செய்தனர். இதை அறிந்த ‘சேவ் தி கேர்ள் சைல்ட்’ அமைப்பினர் மற்றும் சங்காரெட்டி, ஹைதரா
பாத் மாவட்டங்களில் படித்து தற்போது டாக்டர்கள், பொறியாளர்களாக இருப்போர், வெளிநாட்டில் வேலை பார்ப்போர் உள்
ளிட்டோர் இந்த இரு கிராம மக்களுக்கும் உதவ முன்வந்துள்ளனர். இவர்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் சுகன்ய சம்ருதி யோஜனா திட்டத்தில் வைப்பு நிதியை செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

இதனால் இந்த இரு கிராம மக்களும் பெண் பிள்ளைகள் பிறந்தால் மகிழ்ச்சி அடைகின்றனர். சிலுக்கூரு பாலாஜி கோயிலின் பிரதான அர்ச்சகர் ரங்கராஜன் கடந்த பிப்ரவரி மாதம் இந்த கிராமத்திற்கு சென்று, பெண் பிள்ளைகளுக்கு கன்யா வந்தனம் நிகழ்ச்சியை நடத்தினார். பெத்த மைலாபுரம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் சங்காரெட்டி மாவட்ட ஆட்சியர் ஹனு
மந்தராவ் பங்கேற்று, பெண்பிள்ளைகளுக்கான திட்டங்களுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான செயல்கள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்றும் பெண்களை மதிக்கும் பூமி என்றும் அழியாது என்றும் உணர்ச்சி பூர்வமாக பேசினார்.

பின்னர் இதுகுறித்து முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் கல்வி அமைச்சர் இந்திரா ரெட்டி ஆகியோரின் கவனத்திற்கு மாவட்ட ஆட்சியர் கொண்டு சென்றார். இதையடுத்து, கல்வித்துறை சார்பில் சிலர் இந்த இரு கிராமங்களுக்கும் சென்று தகவல்களை சேகரித்
தனர். இந்நிலையில், பெண் பிள்ளைகளை மதிக்கும் இந்த கிராமங்கள் குறித்த பாடம், இந்த ஆண்டு மாநில பிளஸ்-2 ஆங்கில பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மல்லாரெட்டி கூறும்போது, “பெண்களுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகளை தடுக்க, பெண்கள் மீது ஆண்களுக்கு மரியாதை ஏற்பட வேண்டும். இதற்காக நாங்கள் செய்துள்ள விஷயம் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை நினைத்தால் புதிய உத்வேகம் பிறக்கிறது. மேலும் பல திட்டங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
தெலங்கானாபிளஸ்-2 ஆங்கில பாடப்புத்தகம்Telangana village

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x