

கோவா அருகே தீவு ஒன்றில் தேசியக்கொடி ஏற்ற சென்ற கடற்படையினருக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு அம்மாநில முதல்வர் சாவந்த் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுககு ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
கரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த சுதந்திர தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றவுள்ளார்.
நாடு முழுவதும் தீவுகளில் நமது தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கோவா மாநிலத்திற்கு உட்பட்ட சாவோ ஜசின்டோ தீவில் கடற்படை சார்பில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடற்படையினர் அங்கு சென்றனர். ஆனால் அந்த தீவில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடுமையான கோஷங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கடற்படை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கடும் எச்சரிக்கை விடுத்தார். தேசியக்கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது தேச விரோத தடுப்பு நடவடிக்கை பாயும் என கூறியுள்ளார்.
திட்டமிட்டபடி சாவோ ஜசின்டோ தீவில் தேசியக்கொடியை ஏற்றுமாறு அவர் கடற்படையினரை கேட்டுக் கொண்டார். இதனிடையே கப்பற்படையினர் தங்கள் தீவுக்குள் நுழைந்ததற்காக அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தீவை கைபற்றப் போவதாகவும் தகவல் பரவியதால் இந்த எதிர்ப்பு கிளம்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.