

ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜகவைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் பசுவைவிடக் குறைந்ததுதான் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி சிறுமி பலாத்காரக் கொலையில் சிறுமியின் பெற்றோருடன் பேசி புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ கணக்கும், மூத்த தலைவர்கள் சிலரின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஷிர்னடே, பாஜகவில் எம்.பி.யாக இருந்தவரும் காங்கிரஸில் சேர்ந்தவருமான உதித் ராஜ் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது உதித் ராஜ் கூறியதாவது:
தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்கள், மகள்களுக்கு எதிராக ஏதேனும் சம்பவங்கள் நடக்கும்போது, ஏன் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மவுனமாக இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு ஆதரவாகவும், பெற்றோருக்கு நியாயம் கிடைக்கவும் ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டதால்தான், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் தளம் முடக்கப்பட்டது.
டெல்லியில் 9 வயது தலித் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபின், அந்த குடும்பத்தினரைச் சந்திக்க டெல்லி கன்டோன்மென்ட் பகுதிக்கு பாஜக, ஆர்எஸ்எஸ்அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் செல்லவில்லை. இதுவே ஒரு பசு கொல்லப்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியிருப்பார்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் பார்வையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் உயிரின் மதிப்பு பசுவைவிடக் குறைந்தது
இவ்வாறு ராஜ் தெரிவித்தார்
சுப்ரியா ஷிர்னடே கூறுகையில், “ ட்விட்டருக்கு மட்டுமே சொந்தமான கொள்கையை காங்கிரஸ் கட்சி மீறவில்லை. ட்விட்டர் கூறுவதென்றால், தனிப்பட்ட தகவல்களை நீங்கள் பகிர்ந்தால், அது ஏற்கெனவே பொதுத்தளத்தில் இருந்தால், அது கொள்கை மீறல் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி கடந்த 4-ம் ேததி தனது தனிப்பட்ட தகவல்களையும், சிறுமியின் புைகப்படத்தையும் பதிவிட்டார். ஆனால், அவர் பதிவிடுவதற்கு முன்பே பொதுத்தளத்தில் அந்த புகைப்படம் இருந்தது.குறிப்பாக ஊடகங்களில் வெளியானது, தேசிய பட்டியலனித்தவர் ஆணையத்தின் தளத்திலும் இருந்தது. நாங்கள் விதிகளை மீறவில்லை
இவ்வாறு ஷிர்னடே தெரிவித்தார்.