

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பில் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அங்கு காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருவர் லேசான காயங்கள் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் மாநில போலீஸ் ஐஜி விஜயகுமார் கூறியதாவது:
தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதி உஸ்மான், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரிகிறது.
அவர் காஷ்மீர் நெடுஞ்சாலை யில் தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்தார். போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் இவர் கொல்லப்பட்டார். அதனால் அங்கு நடக்கவிருக்க அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் மூலம் நாம் பெரிய வெற்றியை அடைந்துள்ளோம். போலீஸார், பாதுகாப்புப் படையினரின் வீரத்தை நாங்கள் மெச்சுகிறோம்.
இவ்வாறு ஐஜி விஜயகுமார் கூறினார்.
போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நெடுஞ்சாலை பாதுகாப்பில் இருந்த பிஎஸ்எப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த இடத்தை போலீஸாரும், பாதுகாப்புப் படை வீரர்களும் சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் ஒரு கட்டிடத்துக்குள் சென்று மறைந்துவிட்டனர். அங்கிருந்து மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் தீவிரவாதி உஸ்மான் கொல்லப்பட்டார். இரவு முழுவதும் சண்டை தொடர்ந்தது. காலையில் உஸ்மானின் சடலத்தை நாங்கள் கண்டெடுத்தோம்.
ஆயுதங்கள், வெடிபொருட்கள், ஏகே-47 ரக துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், கையெறி குண்டுகள், ஆர்பிஜி-7 ராக்கெட் லாஞ்சர் ஆகியவை சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன.
இதன்மூலம் அப்பகுதியில் தீவிரவாதிகள் பெரிய சதித் திட் டத்தை அரங்கேற்ற இருந்தனர் என்பது தெரிய வந்துள்ளது. இவ் வாறு அவர் கூறினார்.