

டெல்லி தென் மேற்கு பகுதியில் கடந்த 1-ம் தேதி தலித் சிறுமி ஒருத்தி பலாத்காரம் செய்யப்பட்டு மின் மயானத்தில் எரித்து கொல்லப்பட்டார். அந்தச் சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த பதிவு ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் பிரிங்கா காந்தி நேற்று கூறியதாவது:
ஜனநாயகத்தின் மூச்சை திணறடிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் ட்விட்டர் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்களின் கணக்குகளை முடக்குவதற்காக இந்த நிறுவனம் தனக்கென சொந்த கொள்கையை பின்பற்றுகிறதா? அல்லது நரேந்திர மோடி அரசின் கொள்கையை கடைபிடிக்கிறதா?
இதேபோன்ற பல பிரச்சினைகளில் காங்கிரஸ் தலைவர்கள் புகைப்படம் வெளியிடுவதற்கு முன்னர், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வெளியிட்டுள்ளது. அப்போது ஆணையத்தின் ட்விட்டர் கணக்கை முடக்காமல் இருந்தது ஏன்? ஆனால், பாஜக அரசுடன் கூட்டு சேர்ந்துள்ள ட்விட்டர் நிறுவனம் தற்போது 23 காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கணக்குகள் மற்றும் காங்கிரஸின் 7 ஹேண்டல்களை முடக்கி உள்ளது. நீதிக்கான குரலை நசுக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.
டெல்லியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிறகு எப்ஐஆர் பதிவுசெய்ய போலீஸார் அனுமதிக்கப் படவில்லை. இதுகுறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை பேசாதது ஏன்? இவ்வாறு பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், ரன்தீப் சுர்ஜேவாலா, அஜய் மாக்கன், கே.சி.வேணுகோபால் உட்பட 23 தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் மற்றும் ‘காங்கிரஸ் (@ஐஎன்சிஇந்தியா), மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடுகாங்கிரஸ் உட்பட கட்சியின் 7ஹேண்டல்கள் முடக்கப்பட் டுள்ளன.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ராகுல்
டெல்லியில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும் புகைப்படம் இருந்ததால், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தி “ ட்வி்ட்டரின் ஆபத்தான விளையாட்டு” என்ற தலைப்பில் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘‘என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கியதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் எங்களின் அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் தனது வியாபாரத்தை செய்வதற்காக எங்கள் அரசியலை வரையறுக்கிறது. இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறேன். நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச அனுமதியில்லை. ஊடகத்துக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ட்விட்டர் மூலம் நாம் நினைத்த கருத்தை முன்வைக்கலாம், அந்த ஒளிக்கீற்று இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், உண்மையில் ட்விட்டர் நிறுவனம் நடுநிலையானது அல்ல என்பது தெரிந்துவிட்டது’’ என்று கூறியுள்ளார்.