

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு மக்களவை செயலகம் சார்பில் 2 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.
16-வது மக்களவையின் தற்போதுள்ள 539 எம்.பி.க்களில் 315 பேர் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாடாளுமன்ற விதிமுறைகள், நடவடிக்கைகள் குறித்து புதிய எம்.பி.க்களுக்கு அனுபவம் இருப்பதில்லை என்பதால், ஒவ்வொரு மக்களவை தேர்தலுக்கு பிறகும் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையொட்டி, புதிய மக்களவை உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி மக்களவை செயலகத்தின் நாடாளுமன்ற கல்வி மற்றும் பயிற்சியகம் சார்பில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதில், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது எப்படி எனவும், கேள்வி நேரத்தை சந்திக்கும் விதம் குறித்தும், சக உறுப்பினர்களின் ஆதரவு பெறுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.