

ஷீனா போரா கொலை வழக்கில் ஸ்டார் இந்தியா ‘டிவி’யின் முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மும்பையில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த இளம் பெண் ஷீனா போரா படுகொலை வழக்கை சிபஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் ஷீனா போராவின் தாயார் இந்திராணி முகர்ஜி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஆர்தூர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது கணவரும், ஸ்டார் இந்தியா ‘டிவி’யின் முன்னாள் சிஇஓவுமான பீட்டர் முகர்ஜியையும் சிபிஐ அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர், 19-ம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் சொத்து பிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் மும்பை கூடுதல் மெட்ரோபோலிட்டன் நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.அடோன் முன்னிலையில் பீட்டர் முகர்ஜிக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பீட்டர் முகர்ஜி மீது கொலை, சாட்சியங்களை அழித்தது மற்றும் கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
பீட்டர் முகர்ஜியின் ஜாமீன் மனுவை கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சிபஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.