

கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாகவும், வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் கூறுவது பொய். முதல்வர் உம்மன்சாண்டி மிகவும் நல்லவர் என சரிதா எஸ் நாயர் கோவையில் கூறினார்.
கேரளத்தில் சூரியஒளி மின்உற்பத்திக்கான சோலார் தகடுகள் அமைக்கும் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக சரிதா எஸ் நாயர், அவரது நண்பர் பிஜுராதாகிருஷ்ணன் இருவர் மீதும் கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மோசடியில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக பெரும் சர்ச்சை நிலவி வருகிறது.
கோவையில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த சரிதா எஸ் நாயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சோலார் பேனல் விவகாரத்தில், நான் கேரள முதல்வர் தரப்புக்கு ஆதரவாக உண்மையை மறைத்துத்தான் பேசி வந்தேன். ஆனால் நான் லஞ்சமாகக் கொடுத்த ரூ.1.90 கோடி தொகை 2 வருடமாக திரும்பக் கிடைக்கவில்லை; நாங்கள் கேட்ட உதவியும் கிடைக்கவில்லை. எனது நிலைமையைத் தெரிந்து கொண்டும் உதவ மறுத்தனர்.
அதனாலேயே உண்மையை வெளியே கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ தம்மானுரவி, தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ பென்னிபெகனல் ஆகியோர் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கான ஆடியோ ஆதாரங்களை சோலார் பேனல் விசாரணைக் கமிஷன் முன்பு நான் சமர்பித்துள்ளேன். விசாரணைக் கமிஷன் முன்பு குறுக்கு விசாரணை உள்ளிட்டவை முடிந்ததும் சோலார் பேனல் லஞ்சம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.
சோலார் பேனல் விவகாரத்தில் என் மீது குற்ற வழக்குகள் சில நிலுவையில் உள்ளன. எனக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பொருத்துத்தான் முழுமையான ஆதாரங்களை என்னால் வெளியிட முடியும். ஆனாலும் ‘சிடி’, ‘பென்டிரைவ்’ போன்ற டிஜிட்டல் ஆதாரங்களை விசாரணைக் கமிஷன் முன்பு சமர்பிப்பேன். கேரள போலீஸார் எனக்கு வழக்கமான பாதுகாப்பை வழங்குகின்றனர். அனைத்து நேரங்களிலும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. தற்போது அது சற்று அதிகமாகவே உள்ளது.
கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாகவும், வீடியோ ஆதாரங் கள் இருப்பதாகக் கூறுவதும் பொய். உம்மன்சாண்டி அப்படிப் பட்ட மனிதர் அல்ல. பெண்களிடம் நல்ல அணுகுமுறையைக் கொண்டவர். லஞ்சம் பெற்றுக் கொண்டு உதவி செய்யவில்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. அடுத்த இரு நாட்களில் விசாரணை முடியும் என எதிர்பார்க்கிறேன். மதுபான உரிமையாளர்களோ, மற்ற அரசியல் கட்சியினரோ என்னை இயக்கவில்லை. எனது குற்றச்சாட்டை மறைக்க இதுபோன்று பேசுகிறார்கள் என்றார் சரிதா எஸ் நாயர்.