

வேளாண் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க வரும் ஏப்ரல் 14-ம் தேதி தேசிய டிஜிட்டல் வேளாண் சந்தை தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் அண்மையில் அறிவிக்கப் பட்டது. அந்த திட்டத்துக்கான வழிகாட்டு நெறிகளை பிரதமர் மோடி, மத்தியப் பிரதேசம் சேஹோரில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
பயிர் காப்பீட்டுத் திட்டம் மட்டு மன்றி, பிரதமரின் நீர்ப்பாசனத் திட்டம், இயற்கை வேளாண்மை மற்றும் தொடங்கிடு இந்தியா வேளாண்மை திட்டம் ஆகிய வற்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
பாரம்பரிய அறிவு, நவீன கருவிகள், தொழில்நுட்பம் ஆகிய வற்றை ஒருங்கிணைத்து வேளாண்மைத் துறையில் உற் பத்தியைப் பெருக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உள் நாட்டு தேவைக்கு மட்டுமன்றி ஏற்றுமதியிலும் சிறந்து விளங்க வேண்டும்.
அம்பேத்கர் பிறந்த நாளில்..
விவசாயிகள் சாகுபடி செய்யும் வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது இல்லை என்ற குறை நீண்ட காலமாக நீடிக்கிறது. இதை மாற்ற தேசிய டிஜிட்டல் வேளாண் சந்தையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும்.
அதன்படி விவசாயிகள் தங்கள் செல்போன் மூலம் நாட்டின் எந்தப் பகுதிக்கும் வேளாண் விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு மாநில அரசுகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதன் மூலம் இயற்கை பேரிடர்களை விவசாயி கள் எளிதாக எதிர்கொள்ளலாம். விவசாயிகளின் பிரச்சினைகளில் மத்திய அரசு தோளோடு தோள் நின்று உதவி செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
டிஜிட்டல் வேளாண் சந்தையில் நாட்டில் உள்ள 585 மொத்தவிலை சந்தைகளை ஒருங்கிணைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 200 சந்தைகளும் 2017-ம் ஆண்டில் 200 சந்தைகளும் டிஜிட்டல் வேளாண் சந்தையில் இணைக்கப் பட உள்ளன. மீதமுள்ள சந்தைகள் 2018-ம் ஆண்டில் இணைக்கப்படும்.
இந்தத் திட்டம் தொடர்பாக கர்நாடகா, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளன.