

2009-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தகவல் தொழில்நுட்பச் சட்டவிதிகளுக்குப் பதிலாக புதிய தகவல்தொழில்நுட்பச் சட்டவிதிகளை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று மத்தியஅரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டவிதிகளுக்கு தடைவிதிக்கக் கோரி மும்பையைச் சேர்ந்த லீப்லெட் இணையதளமும், பத்திரிகையாளர் நிகில் வாக்லே என்பவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “ தகவல் தொழில்நுட்பச்சட்டத்தின் மூலத்தில் இருப்பதைவிட, அரசியலமைப்புச் சட்டம் 19(2) பிரிவு வழங்கிய பேச்சு மற்றும் கருத்து உரிமையை கட்டுப்படுத்துவதாக புதிய தகவல்தொழில்நுட்பச் சட்ட விதிகள் உள்ளன. ஆதலால் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திப்னாகர் தத்தா, ஜிஎஸ். குல்கர்னி அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல், அனில் சிங் ஆஜராகினார். மனுதாரர்கள் தரப்பில் கம்பட்டா ஆஜராகினார்.
சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் வாதிடுகையில் “ பத்திரிகையாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வகுத்துள்ளது. அதுபோன்றுதான் மத்திய அரசு சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த விதிகள் வகுத்துள்ளது” எனத் தெரிவி்த்தார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு, “ பிரஸ் கவுன்சில் இந்தியாவின் விதிகள் என்பது நடத்தையை ஒழுங்குபடுத்தத்தான், அந்த விதிகளை மீறினாலும் கடுமையாக யாரையும் தண்டிப்பதில்லை.
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வழிகாட்டுதல்கள் உன்னதமான நிலை என எவ்வாறு எடுக்க முடியும்? அந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் தண்டனை கிடைக்குமா? உங்களுக்குச் சிந்திப்பதற்கு சுதந்திரம் இல்லாவிட்டால், எப்படி உங்களால் எதையும் வெளிப்படுத்த முடியும்? ஒருவருடைய சிந்திக்கும் சுதந்திரத்தை எவ்வாறு நீங்கள் கட்டுப்படுத்த முடியும்?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் சிங், “ புதிய விதிகளை நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, மனுதாரர்கள் அச்சப்படுவது தேவையற்றது. புதிய விதிகளை மீறுவோரை தண்டிப்பது முடிவு எடுக்க சிறப்பு குழுஅமைக்கப்பட்டு அதிகாரம் அளிக்கப்படும். 14 மற்றும் 16 ஒழுங்கு முறை எண்களில் உள்ளன. ஆனால், விதி எண் 9 குறித்து மனுதார்கள் அச்சப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் அமர்வு, “ விதி எண் 14 மற்றும் 16 என்பது துறைகளுக்கு உட்பட்ட குழுவிற்கானது. அவசரகாலத்தில் எந்தத் தகவலையும் தடுக்கமுடியும். ஆனால், உங்களின் இந்த வாதத்தை ஏற்க முடியவில்லை. எந்த அவசரசமும் இல்லை என்றீர்கள். பின்னர் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறதே” எனக் கேட்டனர்.
மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் கம்பட்டா, அபெய் நேவாகி வாதிடுகையில் “ மத்திய அரசு புதிய ஐடி விதிகளைக் கொண்டுவந்துள்ளது. இந்த விதிகள் இணையதளத்தில் எந்த செய்தியையும் பிரசுரிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.தகவல் தொழில்நுட்பச் சட்டம் 79-வது பிரிவு தண்டனையிலிருந்து வழங்கியபாதுகாப்பை புதிய சட்டம் பறிக்க முயல்கிறது”எ னத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள்அமர்வு கூறுகையில் “ இது மிகவும் தீவிரமான ஒன்று. சட்டம் அளித்த பாதுகாப்பை மற்றொரு சட்டத்தின் விதிகள் எவ்வாறு பறிக்க முடியும். கடந்த 2009-ம் ஆண்டுதான் 69ஏ(1)(II)பிரிவின் கீழ் தகவல் தொழில்நுட்ப சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், முந்தைய மூலச்சட்டத்தை மீறாமல் மேலும் மேலும் புதிய விதிகளைக் கொண்டு, புதிய சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் என்ன” எனக் கேள்விஎழுப்பினர்.
அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் சிங், “ பொய்யான தகவல்கள், போலிச் செய்திகள், வதந்திகள், உண்மைக்கு மாறான தகவல்களைத் தடுக்கவே புதிய ஐடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நீங்கள் இடைக்கால நிவாரணம் வேண்டுமானால் அளிக்கலாம்”எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை ஒத்திவைத்தனர்.