

உத்தரப்பிரதேசத்தில் கடும் மழையால் நதிகளின் நீர்மட்டம் அபாயக் கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிப்படைந்த 24 மாவட்டங்களை ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.
இந்த வருடம் உ.பி.யில் மிக அதிகமான மழை பெய்து வருகிறது. கங்கை மற்றும் யமுனை ஆகிய இரு நதிகளும் ஓடும் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 மடங்கு அதிகமான அளவில் மழை பெய்துள்ளது.
உ.பி. முழுவதிலும் பெய்த மழை, வழக்கத்தைக் காட்டிலும் 154 சதவிகிதம் அதிகமாக உள்ளது. மழையினால், வறட்சிப் பகுதியான புந்தேல்கண்டின் ஜலோன், பாந்தா, ஹமீர்பூர் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உ.பி.யின் மத்தியப் பகுதியிலுள்ள எட்டவாவின் மிக அதிகமாக 67 கிராமங்கள் நீரில் மூழ்கி விட்டன. மாநிலம் முழுவதிலும் 110 கிராமங்கள் வெளி உலகிலிருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டு விட்டன.
பிரயாக்ராஜ், வாரணாசி, காஜிபூர், பலியா ஆகிய மாவட்டங்களில் கங்கை நதியின் நீர்மட்டம் உயரம் அபாய அளவைத் தாண்டி உள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கின் வேகம் அதிகரித்துள்ளது.
மிர்சாபூரின் கங்கை நதியில் ஒரு சிறிய கான்கிரீட் கட்டிடம் தரையில் இருந்து விலகி மிதக்கிறது. இந்த காட்சி வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகமான மழையால் இங்குள்ள அணைகளில் இருந்து நீர் நிரம்பி வழிந்ததாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, உ.பி.யின் 24 மாவட்டங்களில் 600-க்கும் அதிகமான கிராமங்கள் நீரில் மூழ்கி விட்டன.
மீட்பு நடவடிக்கையில் ராணுவம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை படகு மற்றும் ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த இரண்டு தினங்களாகப் பார்வையிட்டு வருகிறார். பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் எனவும் உ.பி. அரசு அவர்களுடன் இருப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மத்திய அரசின் உடனடித் தலையீட்டால், நிவாரணப்பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ராணுவம் இறக்கப்பட்டுள்ளது. தேசிய நிவாரண மீட்புப் படையினருடன், இந்திய விமானப்படையும் களம் இறங்கியுள்ளது. தனது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமானங்கள் மூலமாக அப்படையினர் மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அவற்றின் உதவியால் நீரில் மூழ்கிய கிராமங்களுக்கு உணவுப் பொட்டலங்களும், நிவாரணப் பொருட்களும் வீசப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கான முகாம்களும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகமாகப் பாதிக்கப்பட்ட வாரணாசி
பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் ஓடும் கங்கையின் நீர்மட்டம் 85 சென்டிமீட்டர் அளவில் ஆபத்தான அளவைத் தாண்டி விட்டது. கங்கையின் கிளை நதிகளான வருணா, அஸ்ஸியின் கரை ஓரங்களில் இருந்த வீடுகள் முழுவதுமான நீரில் மூழ்கி விட்டன. இச்சூழலில் நிகழ்ந்து வரும் சடலங்கள் வாகனத்திற்கு பதிலாக இறுதிச் சடங்களுக்கு படகுகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை
நான்கு நாட்களாக வாரணாசி வெள்ள பாதிப்பு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பாதிப்புகளால் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி மாவட்ட மற்றும் உ.பி. மாநில அதிகாரிகளுடன் நேற்று காணொலி மூலம் நிலைமைகளைக் கேட்டறிந்தார். இத்துடன், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சில உத்தரவுகளைப் பிரதமர் மோடி பிறப்பித்தார்.