காங். ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா திடீர் ஆலோசனை: உத்தவ் தாக்ரேவுக்கும் அழைப்பு

காங். ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா திடீர் ஆலோசனை: உத்தவ் தாக்ரேவுக்கும் அழைப்பு
Updated on
1 min read

வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை சந்திக்கவிருக்கிறார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் எம்.பி.யும், மூத்த தலைவருமான சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில், சிவசேனா தலைவர் சந்திப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடராக சிவசேனா எம்.பி., சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் உள்ளன. அதனால், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி நடத்தும் பேச்சுவார்த்தையில் மகாராஷ்டிரா முதல்வரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் சட்ட மசோதாவின் போது அவைக்குள் நடந்தவற்றை கூறி எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது. தேவைப்பட்டால் நாங்கள் காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் சந்தித்து அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவோம்" என்றார்.

முன்னதாக, சஞ்சய் ரவுத் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமா? ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தில் பலபிரயோகம் செய்யலாமா?" என்று பதிவிட்டிருந்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் முன்கூட்டியே நேற்று முடிக்கப்பட்டது. பெகாசஸ் விவகாரத்தையும், வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து குரல் எழுப்பி கடந்த 17 அமர்வுகளாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியிலும், கூச்சலிலும் ஈடுபட்டன.

மாநிலங்களவையில் நேற்று இன்சூரன்ஸ் சட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றும்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் மீது பலப்பிரயோகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனக் குரல் எழுப்பிவருகின்றன.

ஆனால், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியோ, "எதிர்க்கட்சியினர் தான் அவைக்காவலர்களுடன் பலப்பிரயோகத்தில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளை ஆராய வேண்டும். இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி" என்று கூறியுள்ளார்.

நேற்று நடந்த அமளி தொடர்பாக, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று புகார் அளித்தனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், திமுக எம்.பி. திருச்சி சிவா, மனோஜ் ஜா உள்ளிட்ட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in