2014-ம் ஆண்டுக்குப் பின் அதிக மசோதாக்களை நிறைவேற்றிய மாநிலங்களவை: எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியிலும் சாதனை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
2 min read

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் பெரும் அமளி, கூச்சல் குழப்பத்துக்கு இடையே நடந்து முடிந்தபோதிலும், 2014-ம் ஆண்டுக்குப் பின் 2-வது அதிகமான மசோதாக்கள் இந்தக் கூட்டத்தில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. 19 அமர்வுகள் வரை நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில் 2 நாட்கள் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.

இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ், விவசாயிகள் பிரச்சினை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிக்கக் கோரி பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 17 அமர்வுகளில் மொத்தம் 74 மணி நேரம் 26 நிமிடம் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறாமல் வீணானது.

ஆனால், அதிகபட்சமாக 2014-ம் ஆண்டில்தான் எதிர்க்கட்சிகள் அமளியால் அதிக நேரம் வீணானது. நாள்தோறும் 4.5 மணி நேரத்துக்கு மேல் வீணானது.

ஆனாலும், பெரும் அமளிகளுக்கு இடையே மாநிலங்களவையில் அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்குப் பின் மாநிலங்களவையில் அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்த முறைதான்.

கடந்த 17 அமர்வுகளில் நாள்தோறும் 1.1. மசோதா என்ற வீதத்தில் மொத்தம் 19 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டு கரோனா பரவலுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நாள்தோறும் 2.5 மசோதா என்ற வீதத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மழைக்காலக் கூட்டத்தில் 127-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா, தீர்ப்பாயம் திருத்த மசோதா, வரிச் சீர்திருத்த மசோதா, வைப்பீடு காப்பீடு மற்றும் கடன் உறுதியளிப்புத் திட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகயைில், “மழைக்காலக் கூட்டத்தொடரில் என்னென்ன மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருந்ததோ அதை முடித்துவிட்டது. குடிமக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் இருக்கும் மத்திய அரசு செயல்பாடு, கடப்பாடு, ஆக்கப்பூர்வம், திறமை ஆகியவற்றின் வெளியீடாக இருக்கிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை முடக்கும் வகையில் செயல்பட்டது ஏற்க முடியாதது. அவையை முடக்குவது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது, அவர்களின் இலக்காக இருந்தது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் அவையின் புனிதத்தன்மையைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்டு மேஜை மீது ஏறி நின்று கூச்சலிட்டனர். இதுபோன்ற நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றம் மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க இருக்கிறது. ஆனால், இதுபோன்று அதன் தரத்தைக் குறைக்கும் வகையில் நடந்துகொண்ட எதிர்க்கட்சிகள் அவைத் தலைவரிடமும், தேசத்தின் மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும். இந்தச் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in