

நாடு முழுவதும் உள்ள கீழ் நீதி மன்றங்களில் 2 கோடிக்கும் மேற் பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 10 சதவீதம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப் படாமல் உள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, பல்வேறு மாநிலங் களில் உள்ள மாவட்ட நீதிமன் றங்களில் மொத்தம் 2 கோடியே 60 ஆயிரத்து 998 வழக்கு கள் நிலுவையில் இருப்பதாக தேசிய நீதி தகவல் (என்ஜேடிஜி) இணையதளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதில் 41.38 சதவீதம் அல்லது 83 லட்சத்து 462 வழக்குகள் 2 ஆண்டுக்கும் குறைவாக நிலுவை யில் உள்ளன. அதேநேரம், 10.83 சதவீத (21,72,411) வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலு வையில் உள்ளன. இந்தத் தகவலை உயர்நிலைக்குழு கூட்டத்துக்காக நீதித் துறை தயாரித்த ஒரு குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
என்ஜேடிஜி இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவலோடு ஒப் பிடும்போது, நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை அந்தக் குறிப்பு பிரதிபலிக்கவில்லை எனத் தெரிகிறது. உச்ச நீதிமன்றம், 24 உயர் நீதிமன்றங்களில் நிலு வையில் உள்ள வழக்குகள் பற்றிய தகவலை குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதித் துறை திரட்டி வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது.
மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளில் 18.1 சதவீத (36,30,282) வழக்குகள் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளாகவும், 29.83 சதவீத (59,83,862) வழக்குகள் 2 முதல் 5 ஆண்டுகளாகவும் நிலு வையில் இருப்பதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.
நிலுவை வழக்குகளை எந்த அடிப்படையில், தாமதமாகி வரும் வழக்காக கருதுவது என்பதற்கு எந்த ஒரு அளவுகோலும் இல்லாதது பெரும் பிரச்சினையாக இருப்பதாக நீதித் துறையினர் கூறுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.