8 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல்: 12-ல் 7 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி

8 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல்: 12-ல் 7 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி
Updated on
1 min read

நாடு முழுவதும் 8 மாநிலங்களில் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம் முஷாபர்நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கபில் டியோ அகர்வால் சமாஜ்வாதி வேட்பாளர் கவுரவை 7,352 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

உத்தரப் பிரதேசம் டியோபண்ட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாவியா அலியும் பிகாபூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் ஆனந்த் சென் யாதவும் வெற்றி பெற்றனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா, பால்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் சிவசேனா வேட்பாளர் அமித் கோடா காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர காவித்தை 18,948 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலம் கதூர் சாஹிப் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் சிரோமணி அகாலிதளம் வேட்பாளர் ரவீந்தர் சிங் பிரம்புரா வெற்றி பெற்றார். இந்தத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை.

பிஹார்

பிஹார் மாநிலம் ஹர்லகி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியான ஆர்.எல்.எஸ்.பி. வேட்பாளர் சுதன்ஷு சேகர் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முகமது சபீரை தோற்கடித்தார்.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம், மைஹர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் பாஜக வேட்பாளர் நாராயண் திரிபாதி 54,377 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் படேல் தோல்வியடைந்தார்.

திரிபுரா

திரிபுராவின் அமர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பரிமல் தேப்நாத் 20,355 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ரஞ்சித் தாஸுக்கு 9758 வாக்குகள் கிடைத்தன.

கர்நாடகா

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ஹெப்பால் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜாபர் ஷெரீப்பின் பேரன் அப்துல் ரஹீம் ஷெரீப் பின்னடைவை சந்தித்தார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் நாராயணசாமி 19 ஆயிரத்து 149 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேபோல தேவதுர்கா தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவன கவுடா நாயக் 16 ஆயிரத்து 871 வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.

பீதர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரஹீம் கான் 22 ஆயிரத்து 721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தெலங்கானா

தெலங்கானாவில் மேடக் மாவட்டத்தில் உள்ள நாராயணாகட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வேட்பாளர் பூபால் ரெட்டி 53,625 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தெலுங்கு தேச வேட்பாளர் விஜயபால் ரெட்டி வெறும் 14,787 ஓட்டுக்கள் பெற்று டெபாசிட் இழந்தார்.

ஒட்டுமொத்தமாக 12 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in