

மாநிலங்களவையில் நேற்று சில எம்.பி.க்கள் சில மேஜை மீது ஏறி போராட்டம் நடத்தியதை சுட்டிக்காட்டி கண்டித்த அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தான் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்ததாக கூறி கண்ணீர் விட்டார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வருகின்றன.
இதனால் இரு அவைகளும் சரியாக நடக்கவில்லை. இதனால் கடந்த 3 வாரங்களில் 78 மணி நேரம் 30 நிமிடங்களில் 60 மணி நேரம் 28 நிமிடங்கள் வீணாகின.
ஒட்டுமொத்தமாக 17 மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவை செயல்பட்டது. அதில் 4 மணி நேரம் 49 நிமிடங்கள் மட்டுமே மசோதாக்களுக்காகச் செலவிடப்பட்டது. இதனால் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை மட்டுமே நடைபெறுகிறது. அதற்கு முன்பாக மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
மாநிலங்களவை நடந்து வரும்நிலையில் நேற்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்தார். அப்போது அவர் கண்ணீர் விட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது:
ஒரு பிரச்சினையை எழுப்பி விவாதம் செய்ய கோரப்பட்டபோது அதற்கு அனுமதிக்கப்பட்டது. மாநிலங்களவையின் மாண்பை காக்க எம்.பி.க்கள் தவறிவிட்டனர்.
அவர்களின் செயல்பாடு அவையில் எல்லை மீறிவிட்டது. நேற்று சில உறுப்பினர்கள் மேஜையின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். இதனால் நாடாளுமன்றத்தின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது.
கருத்து வேறுபாடு இருக்கலாம். விவாதிக்கலாம், எதிர்ப்பு தெரிவிக்கலாம், வாக்களிக்கலாம். ஆனால் அனைத்து எம்.பி.க்களும் கண்ணியமாக இருக்க வேண்டும். சபையில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.
நான் மிகவும் வேதனை அடைந்தேன். மிகவும் வருத்தமுற்றேன். வேதனையை தெரிவிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. தூக்கமில்லாமல் நான் இரவைக் கழித்தேன்.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.