

இந்தியாவில் 140 நாட்களில் இல்லாத அளவுக்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3.86 லட்சமாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 38 ஆயிரத்து 353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 20 லட்சத்து 36 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 351 ஆகக் குறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோரில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 140 நாட்களில் முதல் முறையாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 3.86 லட்சத்துக்குக் கீழ் சரிந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 497 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 29 ஆயிரத்து 179 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 1.34 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நாட்டில் இதுவரை 48 கோடியே 50 லட்சத்து 56 ஆயிரத்து 507 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை மட்டும் 17 லட்சத்து 77 ஆயிரத்து 962 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நாட்டில் 51.90 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது