

பிஹாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களின் குற்றவிவரங்களை வெளியிடாமல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத பாஜக, ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளி்த்துள்ளது.
2018-ம் ஆண்டு பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றப் பின்னணி, வழக்கு விவரங்களை மக்களுக்குத் தெரியும் வகையில், நாளேடுகள், மின்னணு ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ரவிந்திரபாட் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், “வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு 48 மணி நேரம் முதல் 2 வாரத்துக்குள் அந்த வேட்பாளரை ஏன் தேர்வு செய்தோம் என்றும், அவர் மீதான நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகள் குறித்தும் நாளேடுகள், சேனல்கள், சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரப்படுத்த வேண்டும்.
அந்தந்தக் கட்சிகள் தங்களின் இணையதளத்திலும் வேட்பாளர்கள் விவரம், குற்றப் பின்னணி, குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா, தேர்வு செய்யப்பட்ட காரணம், கிரிமினல் குற்றச்சாட்டு இல்லாத பிற வேட்பாளர்கள் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் அந்தத் தீர்ப்பை மதிக்காமல் சில கட்சிகள் செயல்பட்டுள்ளதால் அவற்றின் மீது அவமதிப்பு வழக்கு தொடரக் கோரி வழக்கறிஞர் பிரிஜேஷ் மிஸ்ரா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்தத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் அரசியல் கட்சிகளை எவ்வாறு தண்டிப்பது என்பது குறித்து நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், தேர்தல் ஆணையம் பரிந்துரைகளை அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்எப் நாரிமன், பிஆர் காவே ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் அமர்வு கடுமையான கண்டனத்தை அரசியல்கட்சிகளுக்குத் தெரிவித்து 71 பக்கங்களி்ல் தீர்ப்பளித்தனர்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி அளித்த தீர்ப்பில் சிறிய திருத்தம் செய்துள்ளோம். அதன்படி, வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அவர் என்ன காரணத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டார், அவர் மீதான குற்ற வழக்குகள், பின்னணி ஆகியவற்றை அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் தெளிவுபடுத்தி, விளம்பரம் செய்ய வேண்டும்.
குற்றப்பின்னணி உள்ளவர்கள், குற்றங்கள் செய்தவர்களை அரசியலில் ஈடுபட்டு மக்கள் பிரதிநிதிகளாக முடியாது. இது மக்கள் பிரதிநிதிகளாக வருவோரின் மனசாட்சிக்கு உட்பட்டது, அவர்கள் விரைவில் விழித்துக்கொண்டு, அரசியலில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் கலப்பதைத் தடுக்க மிகப்பெரிய அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும்.
இந்த தேசம் தொடர்ந்து காத்திருந்து, அதன் பொறுமையை இழந்துவிட்டது. மாசடைந்து கிடக்கும் அரசியலை சுத்தப்படுத்துவது என்து வெளிப்படையான அரசாங்கத்தின் உடனடிப்பணியாகும்.
2020ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் மதித்து நடக்கவில்லை. நாங்கள் கூறும் அறிவுரைகள் அனைத்தும் கேட்காத காதில் கூறுவதாகிவிட்டது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்திருக்க அரசியல் கட்சிகள் மறுக்கின்றன.
அரசியலமைப்புத் திட்டத்தின் பார்வையில், அதிகாரங்களைப் பிரிப்பதற்காக அவசரமாக ஏதாவது செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும், எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன. மாநிலத்தின் சட்டமன்றக் குழுவிற்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் நாம் மீற முடியாது.வாக்களர்களின் தகவல் அறியும் உரிமை அர்த்தமுள்ளதாகவும், வீரியமாகவும் இருக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.
ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம். இந்த அபாரதத் தொகையை அடுத்த 8 வாரங்களில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கிட வேண்டும்.
இந்த அபராதத்தொகையின் மூலம் தேர்தல் ஆணையம் வாக்களர்களுக்கு தங்களின் தகவல் அறியும் உரிமை குறித்து விழிப்புணர்வி்ல் ஈடுபட வேண்டும். சமூக வலைத்தளம், இணையதளங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், விவாத நிகழ்ச்சிகளின் போது விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஊட்டலாம். இதற்கான நிதி அடுத்த 4 வாரங்களில் உருவாக்கப்பட வேண்டும்
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.