

கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஒட்டகங்களை போலீஸார் பராமரித்து வரும் சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தானில் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதைத் தடுக்கும் நோக்கில் மாநில விலங்காக ஒட்டகம் கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இறைச்சிக்காக ஒட்டகங்களை வெட்டுவதைத் தடைச் செய்யும் சட்டமும் அங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 19-ம் தேதி ஒரு வாகனத்தில் ஒட்டகங்கள் கடத்திச் செல்லப்படுவதாக சுருமாவட்ட போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து அங்குள்ள சித்முக் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சித்முக் போலீஸார் விரைந்து அந்த வாகனத்தை மறித்து ஒட்டகங்களை மீட்டனர்.இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த போலீஸார், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
வாகனத்தில் இருந்த ஒட்டகங்களை போலீஸார் சித்முக் போலீஸ்வளாகத்தில் கட்டி வைத்து பராமரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சித்முக் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி கிருஷ்ணகுமார் கூறும்போது, “தலைமை கான்ஸ்டபிள் பிரிஜேஷ்சிங் தலைமையில் 3 போலீஸார் கொண்ட குழு இந்த ஒட்டகங்களை பராமரித்து வருகிறது. ஒட்டகங்களை பராமரிப்பதில் எங்களுக்குஎந்த சிரமும் இல்லை. ஆனால் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த மரக்கன்றுகள், மரக்கிளைகளை ஒட்டகங்கள் தின்று விடுகின்றன. ஒட்டகங்களை பராமரிப்பதற்கான செலவை நாங்கள்தான் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த ஒட்டகங்களை சிரோஹிபகுதியிலுள்ள என்ஜிஓ அமைப்பிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த என்ஜிஓ 500கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒட்டகங்களை அழைத்துச்செல்ல 4 லாரிகள் தேவைப்படுகின்றன. அந்த வசதி தற்போது இல்லாததால் அவற்றை நாங்களே பராமரித்து வருகிறோம்” என்றார்.