

மும்பையில் கடந்த 2011-ல் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகை நிருபர் ஜே.தேவ் கொலை வழக்கில் சோட்டா ராஜனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜன் மகாராஷ்டிராவில் நடந்த பல்வேறு குற்றச்செயல்களில் தேடப்பட்டு வந்தவர். அம்மாநிலத்தில் மட்டும் அவருக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாவூத் இப்ராஹிமிடம் இருந்து பிரிந்து, தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த சோட்டா ராஜனை இந்தோனேஷியாவின் பாலித் தீவில் வைத்து அந்நாட்டு போலீஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். பின்னர் ஆஸ்திரேலியா வழியாக இந்தியாவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார்.
தற்போது டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட் டுள்ள சோட்டா ராஜனின் குரல் மாதிரியை கேட்டு மும்பையில் உள்ள மகாராஷ்டிரா மாநில திட்ட மிட்ட குற்றச்செயல்கள் கட்டுப்பாடு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த 2011-ல் மும்பையின் புறநகரான பொவாய் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பத்திரிகை நிருபர் ஜே.தேவ்வை சோட்டா ராஜனின் ஆட்கள் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக கொலையாளிகளுடன் சோட்டா ராஜன் தொலைபேசியில் பேசிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதை ஒப்பிட்டு பார்ப்பதற்காக சோட்டா ராஜனின் குரல் மாதிரி தேவைப்படுகிறது. எனவே அவரிடம் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்அட்கர், இது குறித்து பதில் அளிக்குமாறு சோட்டா ராஜனின் வழக்கறிஞர் அன்ஷுமன் சின்ஹாவுக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.