

உத்தரப் பிரதேசத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆளுநர் பி.எல். ஜோஷி அறிக்கை அளித்தால், அதன் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
படாவுன் கிராமத்தைச் சேர்ந்த 2 தலித் சிறுமிகள் கடந்த வாரம் பலாத்காரம் செய்யப் பட்டு கொல்லப்பட்டனர். இதுவிஷயத் தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில் மிஷ்ரா இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமாகி இருப்பது கவலை அளிக்கிறது. வீட்டுக்குள் இருக்கும் பெண்களுக்குக் கூட மாநில அரசால் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலை உள்ளது. குற்றவாளிகள் மீது மாநில அரசு மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது.
சமீபத்தில் 2 சிறுமிகள் பலாத் காரம் செய்யப்பட்டு கொல்லப் பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக தலையிடாது. அதேநேரம், இதுகுறித்து ஆளுநர் அறிக்கை அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்றார்.