

நாடு முழுவதும் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும்தான் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் நிகழ்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார்.
கரோனா நிலவரம் குறித்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில அரசுகளிடம் கரோனா இரண்டாவது அலையின் போது அவர்கள் மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏதேனும் மரணம் நிகழ்ந்ததா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இதுவரை ஒரே ஒரு மாநிலம் மட்டும் தங்களின் மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் நேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு லாவ் தெரிவித்தார்.
இருப்பினும் எந்த மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை மரணம் நிகழ்ந்தது என்று அவர் தெரிவிக்கவில்லை.
13 மாநிலங்களில் பாதிப்பா?
மத்திய அரசு ஒரே ஒரு மாநிலம் தான் பாதிப்பு இருப்பதாகச் சொல்லியிருந்தாலும் இதுவரை ஒடிசா, நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், அசாம், ஜம்மு காஷ்மீர், லடாக், சிக்கிம், திரிபுரா, ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏற்கெனவே மத்திய அரசு, ஆக்சிஜன் நெருக்கடியால் ஒரே ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா இரண்டாவது அலையின் போது நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டருக்காக காத்திருக்கும் அவலம் அரங்கேறியது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும்தான் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் நிகழ்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.