

கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் இறுதியில் ஏற்படலாம் என்று எச்சரிக்கை உள்ள நிலையில், கரோனா வைரஸின் 'R' மதிப்பீடு கவலை அளிப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சக இணை இயக்குநர் லாவ் அகர்வால் இதனைத் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று கரோனா நிலவரம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கரோனாவின் உற்பத்தித் திறனைக் குறிப்பிடும் 'R' மதிப்பீடு ('R' value) அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்த மதிப்பீடு இன்றைய நிலவரப்படி 1.0 அளவில் இருக்கிறது.
இந்த மதிப்பீடு 1.0க்கும் மேல் அதிகரித்தால் அது கவனிக்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டது. அதாவது கடந்த மார்ச் மாதம் கரோனா இரண்டாவது அலை இந்தியாவில் உச்சத்தில் இருந்தபோது இந்த மதிப்பீடு 1.32 என்றளவில் இருந்தது.
இன்றைய நிலவரப்படி இந்த மதிப்பு பஞ்சாப், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் 1.3 என்றும், உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் முறையே 1.1, 1.0 என்றளவிலும் உள்ளது. மாநிலங்களில் அன்றாடத் தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த 'R' மதிப்பீடு உயர்கிறது.
குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் 'R' மதிப்பீடு அதிகரித்து வருகிறது.
அன்றாட பாதிப்பு எவ்வளவு குறைவாக இருந்தாலும் கூட 'R' மதிப்பீடு 1.0வை கடந்துவிடக் கூடாது. அப்படிக் கடந்தால் அது கவலையளிக்கும் விஷயமே என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 28,204 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைவு என்பது ஆறுதல் தரும் விஷயமே.
இருப்பினும், 'R' மதிப்பீடு அதிகரிக்காமல் இருக்க வேண்டும். கடந்த வாரத்தில் பதிவான ஒட்டுமொத்த கரோனா தொற்று எண்ணிக்கையில் 51.51 சதவீதம் கேரளாவில் பதிவானது. கேரளா கரோனாவின் மையப்புள்ளியாக உள்ளது. அங்கு 'R' மதிப்பீடு 1.1 ஆக இருக்கிறது.
கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, அதிகரிக்கும் 'R' மதிப்பீடு கவலை தருகிறது என்று கூறியிருந்தார். அரசாங்கம், மைக்ரோ அளவில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்கி தொற்றுச் சங்கிலியை உடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
'R' மதிப்பீடு என்றால் என்ன?
'R' மதிப்பீடு என்றால் ஒரு தொற்றாளர் எத்தனை பேருக்கு தொற்றைப் பரப்புகிறார் என்பதன் மதிப்பீட்டு அளவு. ஒரு தொற்றாளர் ஒருவருக்கு மட்டுமே தொற்றைப் பரப்பினால் அதன் 'R' மதிப்பீடு 1 என்று அளவீடு செய்யப்படுகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் இந்த 'R' மதிப்பீடு 1.0க்கு கீழேயே இருந்தால் வைரஸ் அதன் பரவும் தன்மையைக் குறைத்து அடுத்தடுத்த அலைகள் உருவாகாமல் நிறுத்தும்.