

எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை உயர் நீதிமன்றங்களின் உத்தரவு இல்லாமல் அரசு வழக்கறிஞர்கள் வாபஸ் பெறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க சிறப்பு அமர்வு ஒன்றை அமைக்க உச்ச நீதிமன்றம் ஆலோசித்து வருவதாகத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.
பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும், தண்டனை பெறும் அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அதில் கடந்த 2 ஆண்டுகளுக்குள்ளாக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பல மாநிலங்களில் அரசுகள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை சிஆர்பிசி 321ன்படி திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக உ.பி. கர்நாடகம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கணிசமான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 76 வழக்குகளும், கர்நாடகத்தில் 61 வழக்குகளும் திரும்பப் பெற மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், சிபிஐ தரப்பிடமிருந்து எந்த நிலவர அறிக்கையும் கிடைக்கப் பெறவில்லை. அதேபோல எம்.பி., எம்.எல்.ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி குறைந்தது 2 ஆண்டுகளாவது அப்பணியில் தொடர வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் வினீத் சரண், சூர்யகாந்த் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், ''உயர் நீதிமன்றங்களின் அனுமதியில்லாமல் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை சிஆர்பிசி 321ன் கீழ் அரசு வழக்கறிஞர் திரும்பப் பெறக் கூடாது. எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் மறு உத்தரவு வரும்வரை அதே பதவியில் தொடரலாம். இதை உயர் நீதிமன்றங்கள் கண்காணிக்கும். எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க சிற்பபு அமர்வு ஒன்றை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் ஆலோசித்து வருகிறோம்” என உத்தரவிட்டது.
அதுமட்டுமல்லாமல் சிபிஐ தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்பதைத் தலைமை நீதிபதி அமர்வு கண்டித்தது. “இதற்கு மேல் எங்களிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. அனைத்தையும் நாங்கள் செய்திருக்கிறோம் என அரசிடம் தெரிவித்துவிட்டோம். சில விஷயங்களை மட்டும்தான் கேட்கிறோம்.
எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை முடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா என மத்திய அரசிடம் கேட்டதற்கு ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அவ்வாறு ஏதும் செய்யவில்லை. இதற்கு மேல் ஏதும் சொல்ல இயலாது. இது உங்களுக்கு கடைசி வாய்ப்பு. இப்போது இதைச் செய்யாவிட்டால், சொல்வதற்கு உங்களிடம் ஏதும் இல்லை என ஊகித்துக் கொள்வோம். வழக்கின் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்” என சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டரை நீதிமன்றம் கண்டித்தது.