

மாநிலங்களவைக்கு வராமல் இருக்கும் பாஜக எம்.பி.க்கள் யார் யார் என்ற விவரங்களை பிரதமர் மோடி கோரியிருப்பதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வருகின்றன.
இதனால் இரு அவைகளும் சரியாக நடக்கவில்லை. இதனால் கடந்த 3 வாரங்களில் 78 மணி நேரம் 30 நிமிடங்களில் 60 மணி நேரம் 28 நிமிடங்கள் வீணாகின.
ஒட்டுமொத்தமாக 17 மணி நேரம் 44 நிமிடங்கள் மட்டுமே மாநிலங்களவை செயல்பட்டது. அதில் 4 மணி நேரம் 49 நிமிடங்கள் மட்டுமே மசோதாக்களுக்காகச் செலவிடப்பட்டது. இதனால் பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை மட்டுமே நடைபெறுகிறது. இதனால் 4 நாட்களுக்கு நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் எளிதில் மசோதாக்கள் நிறைவேறி விடும் சூழல் உள்ளது. ஆனால் மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகள் ஆதரவுடனேயே மசோதாக்கள் நிறைவேறும் சூழல் உள்ளது.
எனினும் மாநிலங்களவையில் பாஜக எம்.பி.க்கள் பலர் தினந்தோறும் வருகை தராமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது.
எனவே ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களிலும் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் மாநிலங்களவையில் இருக்க வேண்டும் என பாஜக கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி மாநிலங்களவைக்கு வராமல் இருக்கும் பாஜக எம்.பி.க்கள் யார் யார் என்ற விவரங்களை பிரதமர் மோடி கோரியிருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவைக்கு வராத எம்.பி.க்கள் குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அப்போது நாடாளுமன்றத்துக்கு வருகை தராத எம்.பி.க்கள் பட்டியலை பிரதமர் மோடி கோரியுள்ளார். அவர்களிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.