Last Updated : 10 Aug, 2021 02:24 PM

 

Published : 10 Aug 2021 02:24 PM
Last Updated : 10 Aug 2021 02:24 PM

பெகாசஸ்; நீதிமன்றம் மீது நம்பிக்கை வையுங்கள்; சமூக வலைதளங்களில் விவாதிப்பதை தவிருங்கள்: உச்ச நீதிமன்றம்

கோப்புப்படம்

புதுடெல்லி

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். நீதிமன்றத்துக்கு வெளியே சமூக ஊடகங்களில் விவாதிப்பதைத் தவிருங்கள் என்று மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்வதேச நாளேடுகள் தகவல் வெளியிட்டன.

இந்த விவகாரத்தைக் கடந்த 3 வாரங்களாக நாடாளுமன்றத்தில் எழுப்பிவரும் எதிர்க்கட்சிகள், நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசி குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர் பரன்ஜாய் குஹா தாக்ருதா, எஸ்என்எம் அப்தி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்சா சடாக்ஸி ஆகியோர் தி எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, சசிகுமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகியுள்ளார். மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகியுள்ளார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், “கடந்த முறை விசாரணை முடிந்தபின் தனது மனுதாரர் என்.ராம் சமூக வலைதளங்களில் ட்ரால் செய்யப்பட்டார். இந்தியப் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கலிபோர்னியா நீதிமன்றம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், அவரின் மனுவில் கலிபோர்னியா நீதிமன்றம் என்ற வார்த்தை இல்லை, அமெரிக்க நீதிமன்றம் மட்டும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்குத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு கூறுகையில், ''பெகாசஸ் விவகாரத்தில் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நீதிமன்றத்துக்கு வெளியே இணையாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் செய்வதைத் தவிருங்கள்.

மனுதாரர்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால், அதை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுங்கள். அதனை நீதிமன்றத்தில் விவாதிப்போம். சில ஒழுங்கங்களைப் பின்பற்ற வேண்டும். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஏதேனும் கூறினால் அது அவர்களைப் பொறுத்தது. ஆனால், நாங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், நீதிமன்றத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் வந்து உங்கள் வழக்கறிஞர்கள் மூலம் பேசுங்கள். நாங்கள் சில கேள்விகளைக் கேட்டோம். அது நீதிமன்றத்தின் செயல்முறை. அது சில நேரங்களில் உங்களுக்குச் சங்கடமான சூழலை ஏற்படுத்தலாம். எங்களிடம் ஏதேனும் இரு தரப்பினரும் தெரிவிக்க விரும்பினால், பிரமாணப் பத்திரம் மூலம் தாக்கல் செய்யுங்கள். நீதிமன்றத்தில் முறையான விவாதத்தின் மூலம் எங்கள் கேள்விக்கு பதில் அளிப்பதை எதிர்பார்க்கிறோம். ஆனால், நீதிமன்றத்துக்கு வெளியே அல்ல” எனத் தெரிவித்தது.

தலைமை நீதிபதியின் கருத்துகளைக் ஏற்றுக்கொண்ட கபில் சிபல், நீதிமன்றத்துக்கு வெளியே இந்த வழக்குத் தொடர்பாக விவாதிக்கப்படாது என்று உறுதியளித்தார்.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் வாதிடுகையில், “இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க வெள்ளிக்கிழமை வரை அவகாசம் தேவை’’ எனத் தெரிவித்தார்.

அதற்குத் தலைமை நீதிபதி, “வெள்ளிக்கிழமை தனிப்பட்ட பணி காரணமாகத் தான் வர இயலாது என்பதால், இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x