

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைகளைச் செயல்படுத்தாமல் மத்திய அரசு தாமதிக்கிறது. இதனால் பல முக்கிய வழக்குகளில் தீரப்பு வழங்குவது தள்ளிப்போகிறது என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு காட்டமாகத் தெரிவித்துள்ளது.
வர்த்தகத்தில் குவித்தல் எதிர்ப்பு தொடர்பான வழக்கில் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு எதிரான விசாரணை நேற்று நடந்தபோது இந்தக் கருத்தை நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் குழு தேர்வு செய்து மத்திய அரசுக்கு பெயர்ப் பட்டியலை அனுப்பும். மத்திய சட்டத்துறை அதற்கு ஒப்புதல் வழங்கும். ஆனால், உயர் நீதிபதிகளைத் தேர்வு செய்து பரிந்துரைகளை அனுப்பியும் மத்திய அரசு மாதக்கணக்கில் தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன், ரிஷிகேஷ் ராய் அமர்வு நேற்று கூறியதாவது:
''டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்ற வேண்டிய நீதிபதிகள் எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கும் குறைவான நீதிபதிகளே பணியில் உள்ளனர். 60 நீதிபதிகள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 29 நீதிபதிகளே உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் (சஞ்சய் கிஷன் கவுல்) நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது 32-வது நீதிபதியாகச் சேர்ந்தேன். அப்போது 33 நீதிபதிகள் எண்ணிக்கையில் இருந்தனர்.
மத்திய அரசின் கீழ்ப்படியாமை மனநிலை, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம், நிர்வாகத்தைப் பெயரளவில் வைத்துள்ளது, கொலிஜியம் பரிந்துரைகள் மீது முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் வகுத்த காலக்கெடுவையும் மத்திய அரசு புறக்கணித்துவிட்டது.
இந்தப் பரிந்துரைகள் கொலிஜியத்துக்கு வந்து சேர மாதங்கள், ஆண்டுகள் ஆயின. ஆனால், கொலிஜியம் இறுதி செய்து அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றவும், செயல்படுத்தவும் அதன்பின் மாதங்கள், ஆண்டுகள் தாமதமாகின்றன. உயர் நீதிமன்றத்தின் நீதி நிர்வாகம் நீதிபதிகள் எண்ணிக்கையில்தான் இருக்கிறது. ஆனால், நீதிபதிகள் எண்ணிக்கை குறைந்திருந்தால், முக்கிய வழக்குகளில் விரைவாகத் தீர்ப்பு வழங்குவது இயலாது.
நீதிமன்றங்கள் சில வழக்குகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் எடுத்து விசாரிக்க முடியாமல் அதனால் ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டால், அது போதுமான அளவு நீதிபதிகளை நியமிக்கப்படாமல் இருந்ததன் விளைவுதான். வர்த்தகரீதியான வழக்குகளில் விரைவான தீர்வு கிடைக்கவும், தீர்ப்பு வழங்கவும் போதுமான அளவு நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கண்டிப்பாக உணர வேண்டும்''.
இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.