இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாத அமைப்புகளுக்கு பண, ராணுவ உதவி செய்தது ஐஎஸ்ஐ: டேவிட் ஹெட்லி 2-வது நாளாக வாக்குமூலம்

இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாத அமைப்புகளுக்கு பண, ராணுவ உதவி செய்தது ஐஎஸ்ஐ: டேவிட் ஹெட்லி 2-வது நாளாக வாக்குமூலம்
Updated on
2 min read

ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற அமைப்புகளுக்கு பாகிஸ் தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ நிதி, ராணுவ உதவி மற்றும் தார்மீக ஆதரவை அளித்தது என தீவிர வாதி டேவிட் ஹெட்லி சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்கா வில் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் டேவிட் ஹெட்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஏ. சனாப் முன்னிலையில் வீடியோ மூலம் 2-வது நாளாக நேற்று சாட்சி அளித்தார்.

அவர் கூறியதாவது:

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு மட்டுமின்றி பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ உளவு அமைப்பு களுக்காகவும் பணிபுரிந்துள்ளேன். பாகிஸ்தான் ராணுவத்தில் பலரை எனக்குத் தெரியும். ஐஎஸ்ஐ அதிகாரி பிரிகேடியர் ரியாஸ், தீவிரவாதி ஸகியுர் ரஹ்மான் லக்வியை இயக்கி யதை நன்றாகவே அறிவேன்.

ஐஎஸ்ஐயும், லஷ்கர் இ தொய்பா வும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப் பாக செயல்பட்டதாக நான் ஊகித்தேன்.

ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற அமைப்புகளுக்கு பாகிஸ் தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ நிதி, ராணுவ உதவி மற்றும் தார்மீக ஆதரவை அளித்தது.

2007 நவம்பர், டிசம்பர் மாதங் களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபர்பாத்தில் லஷ்கர் இ தொய்பா கூட்டம் நடந்தது. இதில், சஜித் மிர், அபு காபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில்தான், மும்பை மீது தீவிரவாத தாக்குதல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதில், மும்பையை வேவுபார்க் கும் பணி எனக்கு ஒப்படைக்கப்பட் டது. பாதுகாப்புத் துறை விஞ்ஞானி களின் கூட்டம் தாஜ் ஓட்டலில் நடக்கப்போகிறது என சஜித் மிர்ரும், அபு காபாவும் என்னிடம் தெரிவித்தனர். அந்த சமயத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என அவர்கள் விரும்பினர். அதற்காக தாஜ் ஓட்டலின் மாதிரி வடிவத்தை யும் அவர்கள் உருவாக்கினர்.

ஆனால், அரங்கத் துக்குள் ஆயுதங்கள், ஆட்களைக் கொண்டு செல்ல முடியாது என்பதா லும், கருத்தரங்கு நடக்கும் கால அட்டவணையை அறிய முடியாத தாலும் தாக்குதல் திட்டம் கைவிடப் பட்டது.

2007 நவம்பருக்கு முன்பு வரை மும்பையைத் தாக்க வேண்டும் என முடிவு செய்யப்படவில்லை.

இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் முழு காரணம். அனைத்து உத்தரவுக ளுமே அதன் தலைவர் ஸகியுர் ரஹ்மான் லக்வியிடம் இருந்தது தான் வந்தன.

மும்பையில் வேவுப்பணி

கடற்படை விமானத் தளம் மற்றும் சித்தி விநாயகர் கோயிலை நான் உளவு பார்த்தேன். லஷ்கர் இ தொய்பாவில் இணைந்த பிறகு, 2006 செப்டம்பர் 14-ம் தேதி மும்பைக்கு முதன் முறையாக வந்தேன். அப்போது தாக்குதல் இலக்குகள் முடிவு செய்யப்படவில்லை. பல இடங் களை நான் கண்காணித்தேன். 2007-ல் பலமுறை தாஜ் ஓட்டலை வேவு பார்த்தேன். நகரத்தின் பல இடங்களையும் வேவு பார்த்தேன்.

2008 மார்ச்சில் மும்பை வந்த போது, தாஜ் ஓட்டல், கடற்படை விமானத் தளம், மகாராஷ்டிர காவல் துறை தலைமையகம் ஆகியவற்றை வேவுபார்த்தேன். மேலும், தீவிர வாதிகள் எந்த வழியாக வர வேண் டும் என்பதற்கான இடத்தையும் தேர்வு செய்தேன்.

2003-ல், லாகூரில் உள்ள மசூதி யொன்றில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அப்துல் ரெஹ்மான் பாஷாவை நான் சந்தித்தேன். அவர் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு வைத்திருந்தார். அந்த நேரத்தில் அல் காய்தாவுடன் அவருக்கு தொடர்பில்லை.

ஜெய்ஷ் இ முகமது தலைவர் மவுலானா மசூத் அசாரை எனக்குத் தெரியும். 2003 அக்டோபரில் அவரை ஒரு முறை பார்த்திருக்கிறேன். லஷ்கர் இ தொய்பா முக்கிய பிரமுகர் களின் கூட்டத்தில் அவர் சிறப்பு விருந்தினராக உரையாற்றினார்.

ஐஎஸ்ஐ

ஐஎஸ்ஐ உளவு அதிகாரி மேஜர் இக்பாலை 2006-ம் ஆண்டு லாகூரில் சந்தித்தேன். அப்போது, இந்திய ராணுவ தகவல்களை சேகரிக்கும் படியும், இந்திய ராணுவ வீரர் ஒரு வரை உளவுப் பணிக்காக நியமிக் கும்படியும் அவர் என்னிடம் கூறினார்.

மேஜர் சமிர் அலியும், இந்தியா வில் சில புலனாய்வுப் பணிகளைச் செய்ய வேண்டும் என என்னிடம் சொன்னார். சமிர் அலியுடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன்.

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தும்படி லஷ்கர் இ தொய்பாவில் யார் உத்தரவிட்டது என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த அமைப்புமே பொறுப்பாளி. அந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கான தலைவர் ஸகியுர் ரஹ்மான் லக்விதான் எனக்கான அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்தவர்.

2007 டிசம்பரில் என் மனைவி, பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகத்தில், “நான் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு வைத்திருப்பதாக” புகார் தெரிவித்தார்.

இவ்வாறு ஹெட்லி தெரிவித்தார்.

அவர் இன்றும் சாட்சி அளிக்கவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in