Published : 09 Aug 2021 01:09 PM
Last Updated : 09 Aug 2021 01:09 PM

காவல் நிலையங்கள்தான் மனித உரிமைக்கும் மாண்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு

நாட்டில் புனிதமாக இருக்கவேண்டிய காவல் நிலையங்கள்தான் மனித உரிமைகளுக்கும், மாண்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் விளைவிக்கும் இடமாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று தேசிய சட்ட சேவை ஆணையத்தின் சட்ட சேவைக்கான செயலியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நாட்டில் புனிதமாக இருக்க வேண்டிய காவல் நிலையங்கள் மனித உரிமைகளுக்கும், மாண்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. சமீபத்திய அறிக்கைகளின்படி, சமூகத்தில் சிறப்பு சலுகை பெற்றவர்கள்கூட போலீஸாரின் 3-ம் தரமான நடத்தையிலிருந்து தப்பவில்லை. அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு அளித்தும், உரிமைகள் அளித்தும், போலீஸ் கஸ்டடி கொடுமை, போலீஸ் அட்டூழியங்கள் தொடர்ந்து வருகின்றன.

கைது செய்யப்படும் அல்லது தடுப்புக் காவலில் கொண்டுவரப்படுபவர்களுக்கு காவல் நிலையங்களில் போதுமான அளவு சட்டரீதியான பிரதிநிதித்துவம் இல்லை. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் தலைவிதியை முடிவு செய்வது என்பது, கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்ட முதல் மணிநேரம்தான் பெரும்பாலும் தீர்மானிக்கிறது.

ஏழைகளின், சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை நீதித்துறை பெற வேண்டுமென்றால், சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும். தற்போது நீதி அவர்களுக்கு வெளியே இருக்கிறது. நீண்டகாலமாக, பாதிக்கப்படக்கூடிய பிரிவில் உள்ள மக்கள் நீதித்துறை செயல்பாட்டின் முறைக்கு வெளியேதான் வாழ்ந்திருக்கிறார்கள்.

நீதிமன்றங்கள் அதிகம் செலவாகக்கூடிய செயல்முறைகளைக் கடைப்பிடிப்பதால், ஏழைகளும், பாதிக்கப்படக்கூடிய பிரிவில் உள்ள மக்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விலகிவிடுவார்கள். இந்தத் தடைகளைத் தகர்ப்பதுதான் நீதித்துறையின் கடினமான சவாலாக இன்று இருக்கிறது.

ஒரு சமூகம் சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்பட வேண்டும் என நாம் விரும்பினால், நீதியை அணுகுவதற்கு அதிக சலுகை பெற்றவர்களுக்கும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும். அது எங்களுக்கு முக்கியமானது.

வரும் எதிர்காலத்தில், நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், நம் தேசத்தின் சமூகப் பொருளாதார வேறுபாட்டின் யதார்த்தங்கள், உரிமைகள் மறுப்புக்கு காரணமாக இருக்கக் கூடாது. நமது கடந்த காலம் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கக் கூடாது.

நீதியை எளிதாக அணுவதில் டிஜிட்டல் பாகுபாடு உதவவில்லை. கிராமப்புறங்கள் மற்றும் தகவல் தொடர்பு இல்லாத பகுதிகள் தகவல் தொடர்பு வசதியில்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் நீதியைப் பெறுவது என்பது வெறும் இலக்கு அல்ல.

நடைமுறைக்கு சாத்தியமானதாக்க அரசின் பல்வேறு பிரிவுகளுடன் கைகோத்துச் செயல்படுவது அவசியம். டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க முன்னுரிமை அடிப்படையில் அவசரமாக நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறேன்.

சமத்துவம் யதார்த்தமாக இருக்கும் எதிர்காலத்தில், சட்டச் செயலாக்கத்தின் அடிப்படையில் ஒரு எதிர்காலத்தைக் கனவு காண்போம். அதனால்தான் நீதியை அணுகுதல் திட்டம் என்பது முடிவுபெறாத இயக்கமாக இருக்கிறது''.

இவ்வாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x