‘‘இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டிய வெள்ளையனே வெளியேறு இயக்கம்’’- பிரதமர் மோடி புகழஞ்சலி

‘‘இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டிய வெள்ளையனே வெளியேறு இயக்கம்’’- பிரதமர் மோடி புகழஞ்சலி
Updated on
1 min read

காலனியாதிக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டம் ஒரு நூற்றாண்டுக்கு மேல் நடந்திருக்கிறது. பல வகைப்பட்ட முறைகளில் இந்தியர்கள் போராடினாலும் அவற்றுக் கெல்லாம் சிகரம் என ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India Movement) போராட்டத்தைச் சொல்லலாம்.

ஆகஸ்ட் 8, 1942-ல் பம்பாயில் கூட்டிய காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய காந்தி ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

அடுத்த நாள் (ஆகஸ்ட் 9, 1942) காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் ஆங்கிலேய அரசு சிறைப்பிடித்தது. இந்தக் கைதுகள் போராட்டத்தை ஒடுக்குவதற்குப் பதிலாக மக்களின் உணர்ச்சிகளை உசுப்பிவிட்டது. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டு ஆவேசமடைந்த மக்கள் பெரும் திரளாகப் போராட்டத்தில் குதித்தார்கள். இதற்குப் பின்னரே விடுதலைப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவெடுத்தது.

போராட்டத்தை அடக்க அரசு பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 76 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 79-வது ஆண்டு தினத்தையொட்டி இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

காலனியாதிக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது புகழஞ்சலிகள். மகாத்மா காந்தியால் உத்வேகமடைந்து, வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவெங்கும் பரவி எதிரொலித்தது; நம் நாட்டு இளைஞர்களை எழுச்சி பெறச் செய்தது.
இவ்வாறு கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in