

நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 35 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 954 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 2 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 447 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 28 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 48 கோடியே 17 லட்சத்து 67 ஆயிரத்து 232 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 13 லட்சத்து 71 ஆயிரத்து 871 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதுவரை நாட்டில் 50.86 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55.91 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.