

கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்குரிய சான்றிதழை சில வினாடிகளில் வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அந்த லிங்க்கை கிளிக் செய்தபின் அதற்குள் சென்று சான்றிதழை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது. டிஜி லாக்கர், கோவின் தளத்தில் சென்று செல்போன் எண்ணை பதிவு செய்து, சான்றிதழை பெற வேண்டியிருந்தது.
ஆனால், தடுப்பூசி செலுத்திய மக்கள் உடனடியாக சான்றிதழைப் பெறும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வாட்ஸ் அப்பில் சான்றிதழை பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் “ சாமானிய மக்கள் வாழ்க்கையில் அதிகமான தொழில்நுட்பங்களை பயன்படுத்திவருகிறார்கள்.
இப்போது கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழையும், எளிதான 3 வழிகள் மூலம் மைகவ் கரோனா ஹெல்ப்டெஸ்க் மூலம் பெறலாம். +91 9013151515 என்ற செல்போன் எண்ணை சேமித்துக் கொண்டு, இந்த எண்ணுக்கு கோவிட் சர்டிபிகேட் என்று டைப் செய்துஅனுப்ப வேண்டும். உடனடியாக சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?
1. +91 9013151515 என்ற எண்ணை செல்போனில் சேவ் செய்து கொள்ள வேண்டும்
2. இந்த எண்ணுக்கு covid certificate என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்.
3. அதன்பின் உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி(OTP) எண்ணை பதிவு செய்தால் சான்றிதழ் கிடைத்துவிடும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விமர்சித்துள்ளார். சசிதரூர் ட்விட்டரி்ல் பதிவிட்ட கருத்தில் “ ஒரு விஷயத்தை அரசாங்கம் சரியாகச் செய்தால் அதை ஆதரித்திருக்கிறேன், பாராட்டியிருக்கிறேன். கோவின் விமர்சனத்தைப் பொறுத்தவரை, மத்தியஅரசு ஏதோ பெரிதாகச் செய்திருக்கிறார்கள். வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு, சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு ஓடிபி எண் வரும். அதன்பின் வாட்ஸ்அப் மூலம் சான்றிதழைப் பெறலாம். எளிதானது வேகமானது”எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 50.68 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 55.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.