

காஷ்மீரில் புல்வாமா மாவட் டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து செயல் படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிர வாத இயக்கத்தின் சார்பில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் இறந்தனர். இது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
ஜம்முவில் உள்ள என்ஐஏ நீதி மன்றத்தில் இவ்வழக்கில் மேலும் 6 பேருக்கு எதிராக கடந்த 4-ம் தேதி என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கண் காணித்து வந்தன. அதில் இருந்து தப்பிக்கவும் தன் செயல்பாடுகளை மறைமுகமாக தொடரவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜெய்ஷ்-இ-முகமது சார்பில் லஷ்கர்-இ-முஸ்தபா என்ற பெயரில் புதிய தீவிரவாத இயக்கம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் அதன் தலைவராக ஹிதாயத்துல்லா மாலிக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தானில் ஜெய்ஷ் தலைவர் மசூத் அசாரின் சகோதரர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
காஷ்மீரில் தொடர்ந்து தீவிர வாத செயல்களை நடத்தும்படியும் உள்ளூர் இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும்படியும் ஹிதாயத் துல்லாவுக்கு கட்டளைகள் பிறக்கப்பட்டுள்ளன. ஹிதாயத் துல்லா தலைமையிலான தீவிரவாதிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் வங்கியில் 60 லட்ச ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். லஷ்கர் இயக்கத்துக்கு ஆயுதங்கள் வாங்க இந்தப் பணத்தை பயன்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அந்தக் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.