டெல்லி சிறுமி பலாத்காரக் கொலை; பாஜகவின் இரட்டை நிலைப்பாடு: சஞ்சய் ராவத் காட்டம்

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் | படம்: ஏஎன்ஐ.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் | படம்: ஏஎன்ஐ.
Updated on
2 min read

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக, தற்போது டெல்லியில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது ஏன் மவுனம் காத்து இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது என சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் தென்மேற்குப் பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இடுகாட்டின் அருகே 9 வயதுச் சிறுமி குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தச் சிறுமியை ஒரு மதகுரு மற்றும் இடுகாட்டில் பணியாற்றிய 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து உடலை எரித்துவிட்டனர்.

சிறுமியின் குடும்பத்தாரைச் சந்தித்து கடந்த வாரம் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்து, உரிய நீதி கிடைக்க துணை இருப்போம், தேவையான உதவிகளை வழங்குவோம் எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி, சிறுமியின் பெற்றோரைச் சந்தித்ததை விமர்சித்திருந்த பாஜக, காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் இதுபோன்று தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டபோது அங்கு சென்று ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தாரா என்றும், ராகுல் காந்தி தேர்ந்தெடுத்து அரசியல் செய்கிறார் என்றும் விமர்சித்தது.

மேலும், சிறுமியின் தாயிடம் தான் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் போக்சோ சட்ட விதிமுறை மீறலில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கோரியிருந்தது. இதன்படி தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கடிதத்தை அடுத்து, ராகுல் காந்தியின் ட்விட்டர் 24 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டது.

இந்தச் சம்பவங்களைக் குறிப்பிட்டு சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர், எம்.பி. சஞ்சய் ராவத் சாம்னா நாளேட்டில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''கடந்த 2012-13 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சி ஆட்சியில் இருந்தபோது, மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிகழ்வில் பாஜக எத்தனை போராட்டங்கள் நடத்தியது.

நாடாளுமன்றத்தை முடக்கியது, ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. ஆனால், டெல்லியில் கடந்த வாரம் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த விவகாரத்தில் ஏன் பாஜக மவுனம் காத்து இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது?

சிறுமியின் குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்தித்ததை, அரசியலாக்குகிறார் என்று பாஜக கூறுகிறதே? அப்படியென்றால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கக் கூடாதா, இரக்கம், கருணை காட்டக்கூடாதா?

9 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் சிறுமியின் தாயாரைப் பார்த்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், சிறுமியின் பெற்றோரைச் சந்திப்பதை பாஜக அங்கீகரிக்கவில்லை. அந்த சந்திப்புகளை வெட்கக்கேடு என்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மன்மோகன் ஆட்சியில் நிர்பயா பலாத்காரக் கொலை நடந்தபோது, பாஜக நாடாளுமன்றத்தை முடக்கியதோடு, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது நினைவிருக்கிறதா? 9 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளதே. இதற்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா?

இந்த விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே அரசியல் போர் நடக்கிறது. காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களிலும் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொல்லப்படும் சம்பவங்களில் ராகுல் காந்தி மவுனம் காப்பது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளார். அப்படியென்றால், பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்று நடந்தால், காங்கிரஸ் கட்சி மவுனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறாரா?

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டு ராகுல் காந்தி தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் ஹாத்தரஸில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோரைக் காணச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது எந்த அடிப்படை?''

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in