

கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததாகக் கூறி 1 லட்சம் போலி பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய தனியார் ஆய்வகங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஏப்ரல் 1 முதல்30 வரை கும்பமேளா நடைபெற்றது. அப்போது கரோனா 2-வதுஅலை பரவி வந்ததால், கும்பமேளாவில் பங்கேற்பவர்களுக்கு கரோனா வைரஸுக்கான ரேபிட் ஆன்டிஜென் மற்றும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகங்களுக்கு உத்தராகண்ட் அரசு ஒப்பந்தம் வழங்கியது.
ஆனால் இந்த ஆய்வகங்கள் கரோனா பரிசோதனை செய்யாமலேயே, கரோனா தொற்று இல்லை என 1 லட்சம் போலியான முடிவுகளை வழங்கியது பின்னர் தெரியவந்தது. இதனால் ஹரித்துவாரில் கரோனா பாசிட்டிவ் விகிதம் அப்போது 0.18 சதவீதமாக இருந்தது. ஆனால் இது உண்மையில் 5.3 சதவீதம் என தெரியவந்துள்ளது.
ஒப்பந்தத் தொகையின் ஒருபகுதியாக உத்தராகண்ட் அரசிடம்இருந்து ரூ.3.4 கோடியை தனியார்ஆய்வகங்கள் பெற்றுள்ள நிலையில், அவை பரிசோதனைக்கான போலி ரசீதுகள் தயாரித்ததும் தவறான பதிவுகள் செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், நோவஸ் பாத் லேப்ஸ், டிஎன்ஏ லேப்ஸ், மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ், டாக்டர் லால் சந்தானி லேப்ஸ், நல்வா லேபரட்டரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். டேராடூன், ஹரித்துவார், டெல்லி, நொய்டா மற்றும் ஹிசாரில் இந்த சோதனை நடைபெற்றது.
இதில் முறைகேடு தொடர்பானஆவணங்கள், போலி ரசீதுகள், லேப்டாப், மொபைல் போன்கள், சொத்து ஆவணங்கள் மற்றும்ரூ.30.9 லட்சம் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. - பிடிஐ