

மும்பை ஏரவாடா மத்திய சிறையில் இருந்து பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்(56) நேற்று விடுதலையானார்.
மும்பையில் கடந்த 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர்.
இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் சோதனையிட்டதில் ஏ.கே. 56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறை யீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. எனினும் தண்டனை காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்தது. ஏற்கெனவே வழக்கு விசாரணையின் போது 18 மாதங் கள் சிறைவாசம் அனுபவித்து, ஜாமீனில் வெளியே வந்த சஞ்சய் தத், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் ஏரவாடா சிறையில் 2013, மே மாதம் அடைக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பலமுறை பரோலில் அவர் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடி வதற்கு முன்பாகவே அவர் நேற்று சிறையில் இருந்து விடுதலை செய் யப்பட்டார். இதனால் ஏரவாடா மத்திய சிறையில் அவரை வரவேற் பதற்காக குடும்பத்தினர், ரசிகர்கள், திரையுலகினர் உட்பட ஏராளமா னோர் திரண்டனர். இதையொட்டி சிறை வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டன.
முன்னதாக நேற்று காலை 8.45 மணியளவில் விடுதலைக்கான அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு வெளியே வந்த சஞ்சய் தத், சிறை வளாகத்தின் உச்சியில் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடிக்கு சல்யூட் அடித்து, மண்ணை தொட்டு வணங்கினார்.
பின்னர் தனக்காக காத்திருந்த மனைவி மான்யதா, நண்பரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராஜ்குமார் ஹிராணி ஆகியோருடன் புனேவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றார்.
சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து தெற்கு மும்பையின் மரைன் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது தாயாரின் கல்லறைக்கு சென்று பிரார்த்தனை நடத்திவிட்டு பாந்த்ராவில் உள்ள தன் வீட்டுக்கு சென்றடைந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘‘எனது தந்தை இப்போது உயிருடன் இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். தன் மகன் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது ஒரே போராட்டமாக இருந்தது. 23 ஆண்டு களுக்கு பிறகு சுதந்திரமான உணர்வு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
சிறையில் என்ன பணி?
சிறையில் இருந்த காலங்களில் மற்ற கைதிகளை போலவே சஞ்சய் தத்தும் நடத்தப்பட்டார். அதிகாலை எழுந்தது முதல் மாலை வரை கைதிகளுக்கு உரிய பணிகளை சஞ்சய் தத் மேற்கொண்டார். குறிப்பாக காகித பைகள் உருவாக்கும் பணியில் சஞ்சய் தத் ஈடுபட்டார். மேலும் கைதிகளின் பொழுதுபோக்குக்காக ‘ரேடியோ ஜாக்கி’ பணியை மேற்கொண்டு பாடல்களையும் பாடியுள்ளார். இந்த தகவலை ஏரவாடா சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.