

கேரளாவில் சமூக ரீதியாக, கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்த்து சமீபத்தில் கேரள அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்துள்ளது.
2021ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி இதற்கான உத்தரவை கேரள அரசு பிறப்பித்தது. இதன்படி, எஸ்ஐயுசி பிரிவினரைத் தவிர்த்து மாநிலத்தில் வசிக்கும் கிறிஸ்தவ நாடார் சமூகத்துக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும்வகையில் ஓபிசி பிரிவில் சேர்க்கப்பட்டது.
கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து குட்டப்பன் செட்டியார் மற்றும் அக்சய் எஸ் சந்திரன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “ அரசியசிலமைப்பு 342-ஏ பிரிவில் 102-வது திருத்தத்தன்படி, எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரில் உள்ள மக்களை சமூக ரீதியாகவோ கல்விரீதியாகவோ அரசியலமைப்புக் காரணங்களுக்காக அறிவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை.
இந்தத் திருத்தத்தின்படி, குடியரசுத் தலைவர் மட்டுமே அறிவிக்க முடியும் அவ்வாறு அறிவித்தால் அரசியலமைப்புச்ச ட்டம் 342-ஏ பிரிவை மீறியதாகும்” எனத் ெதரிவிக்கப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை முடிந்த நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி.சுரேஷ் குமார் நேற்று கேரள அரசின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
அவர் பிறப்பித்த உத்தரவில், “ ஜெய்ஸ்ரீ லட்சுமணராவ் வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பின் 102வது திருத்தத்துக்குப்பின் போதுமான காலஅவகாசம் இருந்தபோதிலும் சமூக மற்றும் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டம் 338-பி பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட வகுப்பின் ஆணையத்திடம் ஆலோசித்தபின் மாநிலங்களுக்கு உட்பட்ட முழுமையான சமூக ரதியாக, கல்விரீதியான பட்டியலை வெளியிட வேண்டும்.
குடியரசுத் தலைவர் விரிவான பட்டியலை வெளியிடும் வரை மாநிலங்களில் உள்ள சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளின் பட்டியல்கள் குறித்த முழுமையான விவரத்தை மாநிலஅரசு நிறுத்திவைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலங்களும் அரசியலமைப்புப் பிரிவு 342-ஏ பிரிவின் கீழ் செயல்படுவதை நிறுத்திவிட்டால் அதன் கடும் விளைவுகள் நேரும் எனத் தெரிவித்துள்ளது.
ஆதலால், கிறிஸ்தவ நாடார்களை ஓபிசி பிரிவில் சேர்த்த கேரள அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.